2 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் மழைநீரில் மூழ்கி சேதம்

Summary

மழையின் காரணமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வரப்பு தெரியாத அளவிற்கு நீர் நிறைந்து, நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் ஏரி போல் காட்சி தருகிறது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நடவு பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் பாதிக்கும் மேல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பொன்னாற்று பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் கருகி வீணாகும் நிலையில் இருந்து வந்தது. அப்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக பாடுபட்டு வந்தனர்.

ஏரி போல் காட்சி அளிக்கும் வயல்கள்

இந்நிலையில் கோடாலி கருப்பூர், சோழமாதேவி, அன்னங்காரம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் தண்ணீர் வடிவதற்கான வாய்க்காலான ரங்கராஜன் கால்வாய் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் மழை பெய்யும் சமயங்களில், வயல்களில் தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாமல் நெற்பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டு வந்தது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.

ஏரி

ஆனால் அதிகாரிகள் அதனை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வரப்பு தெரியாத அளவிற்கு நீர் நிறைந்து, நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் ஏரி போல் காட்சி தருகிறது. இதனால் கடும் போராட்டத்திற்கு இடையே விவசாயப் பணியில் ஈடுபட்டு நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

நடவடிக்கை

தண்ணீர் வடிகால் வழியாக வெளியேறாததால், வயல்களில் நாற்றுகள் மூழ்கி கிடக்கின்றன. இதனால் அவை அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பாதிப்படைந்த வயல்களை கண்டறிந்து, தங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், உடனடியாக ரங்கராஜன் கால்வாயை தூர்வாரி வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link