ரயில்களில் தீப்பிடிப்பது, பவர் பேங்க் வெடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க ரயில்வே வாரியம் சில முக்கியமான முடிவுகளை எடுத்து இருந்தது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரவு நேரங்களில் மொபைல்போன் சார்ஜிங் வசதியை ‘கட்’ செய்ய ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அந்த உத்தரவு சரிவர பின்பற்றப்படாதது தெரிய வந்தது.
அண்மையில், தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் பயணி ஒருவர் இரவு நேரத்தில் சார்ஜ் செய்த போது பவர் பேங்க் வெடித்தது. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, ‘ரயில் பெட்டிகளில் உள்ள, மொபைல் போன் சார்ஜிங் பாயிண்ட்டுகள் இரவு 11 மணி முதல், அதிகாலை 5 மணி வரை, அணைத்து வைக்க வேண்டும்’ என அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவு;
சார்ஜிங் பாயிண்ட் அணைத்து வைக்கப்படும் விஷயத்தில் எந்த விதிவிலக்கும் கூடாது. நடைமுறையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, உரிய பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டு, உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
