“சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள்” – உதயநிதி விமர்சனம்!

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை உச்ச நேரங்களில் (Peak Hours) தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வாங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டிருந்தது. அதன்படி, மொத்தம் 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என்ற விலையில் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அப்போது, ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 37.50 வரை கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் முதல் மே மாதம் வரை மாலை நேரங்களில் பயன்படுத்துவதற்காகக் கொள்முதல் செய்யப்பட உள்ள மின்சாரத்தின் விலை தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீப் சிம்.எம்.யின் (Cheap CM) சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் ஆன்லை அபூசர்கள் (Online Abusers) வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை – செய்வது நிர்வாகமும் இல்லை – ஆனால், இவ்வளவு உறுதியாக (Confident) நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் டம்மி சி.எம். (DUMMY CM), கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?. இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை ரிவர்ஸ் கியர் (Reverse Gear) போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.