“இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணமும் லஞ்சம்தான்” – சீமான்

சிவகங்கை: “தாலிக்கு தங்கம், இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணம் போன்றவையும் லஞ்சம்தான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

காளையார்கோவிலில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கண்டவர்களுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டி சிலைகளை வைக்கின்றனர். சுதந்திர போராட்டத்துக்காக போராடிய மருது சகோதரர்களுக்கு நினைவிடத்தில் சிறிய அளவில் மட்டுமே சிலை உள்ளது.

சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை என்று கூற முடியாது. அதனால், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையை கேள்வி கேட்க முடியாது. தவறு செய்யவில்லை என்று அவர் நிரூபித்து வெளியே வரட்டும்.

மண்ணின் மைந்தன் என்று என்னை சொல்கிறீர்கள். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் என்னை தோற்கடித்து விட்டீர்கள். இது எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது.

பணம் பெறுவது மட்டும் லஞ்சம் கிடையாது. தாலிக்கு தங்கம், இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணம் போன்றவையும் லஞ்சம்தான். அரசு வருவாய் அனைத்தையும் இலவசம் என்ற பெயரில் கொடுத்துவிட்டு, வெறும் வாயை வைத்து என்ன செய்வது?

விமான எரிபொருளுக்கான வரியைக் குறைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் நன்மை செய்துள்ளனர். இதன்மூலம் மக்களுக்கு என்ன பயன்? இந்த அரசு மக்கள் நலம் சார்ந்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

மின் கட்டணம், அரிசி விலை உயர்ந்து விட்டது. கர்நாடகம், ஆந்திரா மாநில பால் பொருட்களை வாங்கிக் கொண்டு, ஆவினை ஒழித்துவிட்டனர். கடந்த 60 ஆண்டுகால ஆட்சியில் மின் உற்பத்திக்கென முதலீடு செய்யாதது ஏன்? மின்சாரத்தை வாங்குவதன் மூலம் கமிஷன்தான் பெறுகின்றனர்.

திமுக மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.20-க்கு வாங்கியது, தவெக ரூ.35-க்கு வாங்குகிறது. இதில் என்ன மாற்றம்? ஆட்சி மாறுகிறது; ஆட்சி முறையில் மாற்றமில்லை. தீய சக்தி, ஊழல் சக்தி, இரண்டையும் சேர்த்த கொடூர தீய சக்தி தவெக” என்று அவர் கூறினார்.

Source link