கடந்த வாரம் வரை அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை துறந்து தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால் அதிமுகவில் பிளவு உறுதி என பேசப்பட்டது. கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவர் எஸ்.பி.வேலுமணி, வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு மிக்க சி.வி.சண்முகம் ஆகியோரும் அதிருப்தியில் இருப்பதாகவும், தவெக பக்கம் தாவலாம் என்றும் தகவல் பரவியது.
ஆனால் திடீரென வேலுமணி, “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி பெற வேண்டும்” என்று பேசினார். சி.வி.சண்முகமும் “அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
அதிமுகவில் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் “அதிமுகவை பிளவுபடுத்தினால் பாஜகவுக்கு தான் நஷ்டம். தவெகவுக்கு தான் லாபம். எடப்பாடி தலைமையில் அதிமுக ஒற்றுமையாக இருந்தால் தான் INDIA கூட்டணியை எதிர்க்க முடியும். தனித்தனியாக பிரிந்தால் பாஜகவின் கணக்கு தப்பாகிவிடும்.” இதனால் வேலுமணி, சிவி சண்முகத்திற்கு டெல்லியில் இருந்து ஒரு மறைமுக எச்சரிக்கை / அறிவுரை வந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தவெகவில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை
விஜயபாஸ்கர் போனவுடன் அவருக்கு தவெகவில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை பார்த்த வேலுமணிக்கு, தான் போனால் கொங்கு மண்டல செல்வாக்கு தவெகவில் எடுபடாது, அதிமுகவில் இருந்தால் தான் தனக்கு மதிப்பு என்ற கணக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல சிவி சண்முகத்திற்கும் வன்னியர் பெல்ட்டில் பாமக, தவெக போட்டி இருப்பதால் அதிமுகவே பாதுகாப்பு என்ற எண்ணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ஆதரவு எடப்பாடிக்கு தான் – அடுத்து என்ன?
எடப்பாடி பழனிசாமிதரப்பும் அமைதியாக இல்லை. “வருபவர்கள் வரட்டும், போகிறவர்கள் போகட்டும், ஆனால் கட்சி என் கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று காட்டியதோடு, டெல்லியில் மோடியை நேரில் சந்தித்து “நான் தான் அதிமுக” என்ற முத்திரையை குத்திவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லி ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி இந்த ஒற்றுமை கோஷத்தை ஏற்றுக்கொள்வாரா? வேலுமணி, சிவி சண்முகத்தை மீண்டும் அரவணைத்து பெரிய பொறுப்பு கொடுப்பாரா? இல்லை “வந்தால் இருங்கள், ஆனால் என் தலைமையை ஏற்க வேண்டும்” என்று நிபந்தனை விதிப்பாரா? என்பது தான் அடுத்த அத்தியாயம்.
அதிமுகவை உடைக்க நினைத்தவர்களுக்கு டெல்லி சிக்னல் கிடைத்துவிட்டது. அதிமுகவின் அடுத்த அத்தியாயம் ஒற்றுமை பாதையில் தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
