ரூ 41-க்கு மின்சாரம் கொள்முதல்; சீப் சி.எம்; டம்மி சி.எம்; சீழ் பிடித்த ஆட்சி: உதயநிதி கடும் தாக்கு

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மின்சார வாரியம் டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.41.50க்கு வாங்க முடிவு எடுத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உதயநிதி கடும் தாக்கு

இந்நிலையில், தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘சீப் சி.எம்-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “சீப் சி.எம்-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் இணையவழித் துன்புறுத்துபவர்கள் (Online Abusers) வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை – செய்வது நிர்வாகமும் இல்லை – ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் டம்மி சி.எம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?

இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை ரிவர்ஸ் கியர் (Reverse Gear) போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விளக்கம் 

இந்நிலையில், வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 முதல் ரூ.41 வரை கொள்முதல் செய்யப் போவதில்லை என்றும், கூடுதல் விலை கேட்டதால் டெண்டரை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளேன் 3 மாதங்களை சமாளிக்க தேவையான மின்சாரம் நம்மிடம் உள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். 

இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “குறிப்பிடப்பட்டுள்ள 37 முதல் 41 ரூபாய் வரையிலான விலையில் நாங்கள் மின்சாரத்தை வாங்கப்போவதில்லை. இன்று டெண்டர்களைத் திறந்து பார்த்தபோது, ​​பல விற்பனையாளர்கள் மிக அதிக விலையைக் கோரியுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் எங்களிடம் போதுமான அளவில் இருப்பதாலும், அடுத்த கோடைகாலத்திற்காக மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை. இதற்கிடையில், வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாங்கள் வெளியிடவுள்ளோம்.

எனவே, இனி அதிக விலையில் எரிவாயு (மின்சார உற்பத்திக்கான எரிபொருள்) கொள்முதல் செய்யப்படமாட்டாது; மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யுமாறு நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Source link