தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சகோதரி உடனான சிறுவயது அனுபவம், தற்போது தனது வீடு இருக்கும் நிலை குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சகோதரி ஐஸ்வர்யாவுடன் வளர்ந்த நாட்களைப் பற்றிப் பகிர்ந்தபோது, ஒரு காலத்தில் இரண்டு மகள்கள் மட்டுமே நிறைந்திருந்த தங்களது சிறுவயது வீடு, இப்போது வெவ்வேறு வயதுடைய நான்கு பேரக் குழந்தைகளால் எவ்வாறு மகிழ்ச்சியாக மாறியுள்ளது என்பதை விவரித்தார்.
இது குறிதது பிகைண்ட்வுட்ஸ் டிவி நேர்காணலில் பேசிய அவர், “நாங்கள் வளரும்போது, எங்கள் வீட்டில் பெண்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது வயது வித்தியாசம் உள்ள 4 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகம். அது மிகவும் அழகாக இருக்கிறது. யாத்ராவுக்கு கிட்டத்தட்ட 18 வயதாகிறது. லிங்காவுக்கு 12 முதல் 15 வயதிருக்கும். என்னுடைய மகன்களுக்கு 10 மற்றும் 3 வயது.
என் பெற்றோர் தங்கள் பேரக் குழந்தைகளுடன் பழகும் விதம் மிகவும் அழகானது, ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வயதில் இருக்கிறார்கள். என் அக்காவின் மகன்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அவர்களுக்காக நான் எப்போதும் இருப்பேன்” என்று கூறினார்.
தொடர்ந்து தனது பெற்றோருடன் அவர்கள் பழகும் விதத்தைப் பற்றி அன்புடன் பேசிய அவர், ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார்: இரண்டு சகோதரிகளும் சிறுவயதில் பாதுகாப்பான சூழலிலேயே வளர்ந்த போதிலும், அவர்கள் இருவரும் தங்களது தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் அன்பு முற்றிலும் வித்தியாசமானது. “நானும் என் சகோதரியும் சிறுவயதில் எங்கள் தந்தையுடன் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். ஆனால், என் சகோதரி என் தந்தையுடன் வைத்திருக்கும் அனபில் இருந்து என்னுடைய அன்பு முற்றிலும் வேறுபட்டது” என்று கூறினார்.
இது குறித்து மனநல மருத்துவர் மற்றும் உறவுமுறை வழிகாட்டியான (relationship breakthrough coach) டெல்னா ராஜேஷ் கூறுகையில், சௌந்தர்யாவின் வார்த்தைகள் பெற்றோர் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் ஒரு உளவியல் உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான சிறு வயது அனுபவத்தைப் பெறுவதில்லை; அதேபோல் சமமாக அன்பு செலுத்தப்படுவதை உணர பெற்றோர் இருவருடனும் ஒரே மாதிரியான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை.
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான சுபாவம், ஆளுமை மற்றும் உணர்ச்சி சார்ந்த தேவைகளுடனேயே குடும்பத்திற்குள் வருகிறது. ஒரு குழந்தை அடிக்கடி ஆறுதலையும் நம்பிக்கையையும் எதிர்பார்க்கலாம், மற்றொரு குழந்தை பேச்சுக்கள் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம், 3-வதாக ஒரு குழந்தை இணைந்து செய்யும் செயல்பாடுகள் மூலம் பிணைப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகள் வளரும்போது ஒரே பெற்றோர் கூட தங்களின் மாறுபட்ட பொறுப்புகள், அழுத்தங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான திறன் காரணமாக வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கலாம்”
இதனால்தான் வளர்ப்பில் ‘சமத்துவம்’ என்பதை ‘ஒரே மாதிரி நடத்துவது’ என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. “ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரியான கவனம், வாய்ப்புகள் அல்லது பதில்களை அளிப்பது மட்டுமே அவர்கள் தங்களைப் புரிந்து கொண்டதாக உணர வைத்துவிடாது. நியாயம் என்பது அன்பில் எந்தவிதமான உயர்-தாழ்வையும் உருவாக்காமல், ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளையும் அங்கீகரிப்பதே ஆகும்.
இந்த வேறுபாடுகள் ஒப்பீடுகளாக மாறும்போது தான் சிக்கல்கள் தொடங்குகின்றன. பொறுப்பான குழந்தை தானாகவே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, உணர்ச்சிவசப்படும் குழந்தை பிடிவாதக்காரர் என முத்திரை குத்தப்படுகிறது, மேலும் வெளிப்படையாகப் பேசும் குழந்தை அடங்காதவர் என்று மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. காலப்போக்கில், குழந்தைகள் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற போட்டியிடத் தொடங்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை நிறைவேற்றினால் மட்டுமே அன்பு கிடைக்கும் என்று நம்பத் தொடங்கலாம்” என்று டெல்னா இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும் உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்பு என்பது தொடர்ச்சியான அரவணைப்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நம்பகத்தன்மை போன்ற அனுபவங்கள் மூலமே உருவாகிறது. “தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு இருக்கிறது என்பதையும், இந்த வேறுபாடுகள் தங்களின் குடும்பப் பிணைப்பைப் பாதிக்காது என்பதையும், அன்பைப் பெற தங்கள் சகோதரன் அல்லது சகோதரியைப் போல மாற வேண்டியதில்லை என்பதையும் குழந்தைகள் உணர வேண்டும்.
குடும்ப உறவுகள் காலப்போக்கில் எவ்வாறு பரிணமிக்கின்றன என்பதையும் சௌந்தர்யாவின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. “குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி பேரக் குழந்தைகள் வரும்போது, பெற்றோருக்குப் புதிய பிணைப்புகளை உருவாக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. தன்னாட்சியை நோக்கிய பயணத்தில் இருக்கும் ஒரு பதின்ம வயது பேரக் குழந்தையிடமும், விளையாட்டு மற்றும் அன்பை எதிர்பார்க்கும் மூன்று வயது பேரக் குழந்தையிடமும் தாத்தா பாட்டி வெவ்வேறு விதமாகப் பழகக்கூடும்.
கவனம் பெறுவதற்கான போட்டியாக மாறாமல், ஒவ்வொரு குழந்தையின் தேவைகளுக்கும் ஏற்ப அன்பு செலுத்தும் வரை, இதுபோன்ற உறவுகள் குடும்ப வாழ்க்கையை மேலும் வளமாக்கும். ஒரு குடும்பத்தின் அழகு என்பது அனைவரும் ஒரே மாதிரியான பிணைப்பைப் பகிர்வதில் இல்லை. “மாறாக, ஒவ்வொரு நபரும் தங்களுக்குரிய தனித்துவமான பிணைப்பை, ‘தான் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனா’ என்ற எந்த சந்தேகமும் இன்றி உணர்வதிலேயே உள்ளது” என்று டெல்னா கூறினார்.
