பொன்முடியிடம் நெருக்கம் காட்டும் உதயசூரியனுக்கு எ.வ.வேலு உடன் அதிருப்தியா?

விழுப்புரம்: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக சங்கராபுரம் முன்னாள் எம்எல்ஏ உதயசூரியனின் துணைவியார் அங்கயற்கண்ணி இருந்து வந்தார். இருப்பினும் விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அடையாளமாக பொன்முடியின் கையே ஓங்கியிருந்தது. எனவே பொன்முடியுடன் உதயசூரியன் நெருக்கமாக இருந்து வந்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதும், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ உதயசூரியனும், தெற்கு மாவட்டச் செயலாளராக ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயனும் இருந்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், வசந்தம் கார்த்திக்கேயனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், திமுக தலைமை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை நியமித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவினர் பொன்முடியுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்துவிட்டனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொன்முடி வந்தபோது, உதயசூரியன் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்று, அவரோடு நெருக்கம் காட்டினார். திமுகவில் எ.வ.வேலுவின் எதிர் கோஷ்டியாக அறியப்படும் பொன்முடியுடன் உதயசூரியன் நெருக்கம் காட்டுவதை உதயசூரியன் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக திமுகவினர் சிலரிடம் பேசியபோது, “நடப்பதையெல்லாம் அறிந்தும் கார்த்திக்கேயனை எ.வ.வேலு கண்டிக்கவில்லையே என்ற மனவருத்தத்தில் உதயசூரியன் இருந்தார். அதிகாரத்தில் இருந்தபோது கார்த்திக்கேயனிடமும், உதயசூரியனிடமும் பாகுபாடின்றி பழகிய எ.வ.வேலு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் கார்த்திக்கேயனின் தலையீடு அதிகரித்தபோதும், உதயசூரியன் அமைதியாக இருந்து வந்தார்.

தேர்தலுக்குப் பிறகு உதயசூரியன் தோல்வி அடைந்த பின்னர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்து வந்தார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தவேல் உட்பட வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்களும் மாவட்டச் செயலாளரான உதயசூரியனை சந்திப்பதை விட, வசந்தம் கார்த்திக்கேயனின் ஆதரவாளர்களாகவே மாறினர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அரசியலில் நீண்ட பாரம்பரியம் கொண்ட உதயசூரியனை புறக்கணிப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நேரத்தில் பொன்முடி வந்தபோது அவரை உற்சாகமாக வரவேற்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார் உதயசூரியன்” என்றனர்.

இதுதொடர்பாக உதயசூரியனிடம் பேசுகையில், “பாரம்பரியமிக்க திமுக காரன். நான் என்ன மாற்றுக் கட்சியை சேர்ந்தவரையா சந்தித்தேன்? பொன்முடி எங்கள் கட்சியைச் சேர்ந்தவர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது அவர் தான் அமைச்சர். அவருடன் நீண்ட காலம் பயணித்தவன். அப்படிப்பட்டவர் நான் சார்ந்திருக்கும் தொகுதிக்கு வரும்போது சந்திப்பது இயல்பு தானே.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு என்னிடம் தொடர்பில் தான் இருக்கிறார். அவரும் என்னை கைவிடவில்லை. நானும் அவரை கைவிட மாட்டேன். திமுக ஒரு குடும்பம். கசப்புகள் இருந்தால் பேசக்கூடாதா என்ன? கட்சி மாறி திமுகவுக்கு வந்தவர்கள் ஏதேனும் உளறுவார்கள். அதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டு இருக்க முடியுமா? கட்சித் தலைமை யாரை கைகாட்டுகிறதோ, அவர்கள் சொல்படி செயல்படுவது தான் உண்மையான திமுக காரனின் வழக்கம். பகுத்தறிவோடு செயல்படுவோம், பண்பாடடோடு நடந்து கொள்வோம்” என்றார்.

Source link