நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 2000 கோடிக்கு ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “மீடியா பின்புலம் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் முதல்வராகியுள்ளார் விஜய். ஆனால், தி.மு.க அப்படி இல்லை. இலவசம் முக்கியமில்லை, தரம்தான் முக்கியம் என முதல்வர் கூறுகிறார். சத்துணவில் கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு தரம் இருந்தது என்பது பலருக்கும் தெரியும். பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தில் நிரூபித்துதான் ஆக வேண்டும்.
மக்கள் பணத்தை கொள்ளையடித்து தேர்தலின்போது பணம் கொடுக்கிறது தி.மு.க. இடைத்தேர்தலில் காசு கொடுக்காமல் த.வெ.க வெற்றி பெற்றுள்ளது. பண அரசியலை முன்னிறுத்தி கொள்கையை பெயரளவில் மட்டுமே தி.மு.க வைத்துள்ளது. எ.வ. வேலு, செந்தில் பாலாஜிக்கு அண்ணாவை பற்றியோ, பெரியாரைப் பற்றியோ தெரியுமா? இது பழிவாங்கும் அரசியல் அல்ல. வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். அதன்படி செயல்படுகிறோம்.
நெடுஞ்சாலைத் துறையில் தேர்தல் ஆண்டில் மட்டும் 2,000 கோடி ரூபாய்க்கு பேட்ச் வொர்க் நடந்துள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பேட்ச் வொர்க் செய்ய வேண்டுமென்றால், டெண்டர் விட வேண்டும். இதனால், திட்ட மதிப்பீட்டை 10 லட்சம் ரூபாய்க்குள்ளாகவே காட்டி, உண்மையான ஒப்பந்ததாரர்கள் இன்றிப் போலியான நபர்களைக் கொண்டு ஊழல் செய்துள்ளனர். இதே போல அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
