முல்லை பெரியாறு அணையை காத்ததற்கு நன்றிக்கடன்; கே.எம்.அப்பாஸ் உடலை சுமந்து சென்ற வைகோ

மூத்த விவசாய சங்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியுமான கே.எம். அப்பாஸ் (94) உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரது உடலை சுமந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மூத்த விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் (94). முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியான இவர், தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காகவும், அணை உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தவர். 

ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் முன்னாள் தலைவராகப் பதவி வகித்த அவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டங்களை நடத்தியவர். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக்கின் வரலாற்றையும், அணையின் அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியையும் மக்கள் மற்றும் ஊடகங்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவர் மிக முக்கியப் பங்காற்றியவர். 

மேலும், அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகள் மற்றும் அதற்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். அணை குறித்த உண்மையான தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.

இதனிடையே உடல்நலக்குறை மற்றும் வயது மூப்பு காரணமாக இவர் மரணமடைந்த நிலையில், அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், த.வெ.க எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கில் நேரில் கலந்துகொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அப்பாஸ் உடலை பார்த்து கண்ணீர்விட்டு அழுத நிலையில், இறுதிச்சடங்கின்போது அவரது உடலை சுமந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு பதிவில், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அவரை சுமந்து சென்றார். நண்பனுக்காக நட்புக்காக அவர் முல்லைபெரியார் அணையை காத்துக்கொடுத்தமைக்காக நன்றி கடன் செலுத்தினார் மக்கள் தலைவர் வைகோ என்று பதிவிடப்பட்டுள்ளது. 

Source link