Auto rickshaw: தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு.. கிமீ-க்கு 25 ரூபாய்! ஏறி இறங்கினாலே 50 ரூபாய்!

சென்னை: தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், கூடுதல் கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஆட்டோ தொழிலை நம்பி உள்ளனர். ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டணத்தை உயரத்தி வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக முன்வைத்து இருந்தனர். 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதிலும், தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக வெற்றி பயணம் அறிவித்த பிறகு, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக பல்வேறு இடங்களிலும் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடனான ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசிய போது, தீபாவளிப் பண்டிகைக்கு முன் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டண விகிதங்களை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி மற்றும் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை பெருநகரப் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கும் கட்டண விகிதங்களை நிர்ணயிக்குமாறு மாநில போக்குவரத்து ஆணையத்துக்கும் சம்பந்தப்பட்ட மண்டலப் போக்குவரத்து ஆணையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூரத்துக்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆகும். இதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணம் ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாதையில் கூடுதலாகப் பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆட்டோக்கள் காத்திருக்கும் நேரத்துக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.