“தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்” – இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன? | “I make a living from Dawood Ibrahim” – What does director Ram Gopal Varma say?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம் கோபால் வர்மா அளித்துள்ள பேட்டியில் தாவூத் இப்ராகிமைப் பாராட்டி இருக்கிறார். அவர் தனது பேட்டியில், “‘தாவூத் இப்ராகிமால்தான் எனது பிழைப்பு நடக்கிறது. எனது வெற்றிக்கு தாவூத் இப்ராகிம்தான் காரணம். அவர் இல்லையென்றால் என்னால் சத்யா மற்றும் கம்பெனி போன்ற வெற்றிப்படங்களை எடுத்திருக்க முடியாது.

இந்தத் திரைப்படங்கள் என்னை பாலிவுட் துறையில் தனியாக அடையாளப்படுத்தி காட்டியது. அதோடு இந்தப் படங்கள்தான் எனக்கு இப்போதும் வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கதைக்களங்களால்தான் தனது வாழ்க்கையும் பொருளாதார நிலையும் உயர்ந்தது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மா

எனவே எனது Guns & Thighs சுயசரிதையை முதலில் அந்தத் தாதாவிற்குத்தான் அர்ப்பணித்தேன். ஆனால் வெளியீட்டாளர்கள் அந்தப் பெயரை நீக்கிவிட்டனர்.

1990களில் மற்ற இயக்குநர்கள் நிழல் உலக தாதாக்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்தபோது, எனக்கு ஒரு மிரட்டல் அழைப்பு கூட வந்ததில்லை. தாதாக்கள் எனது படங்களை நேசித்தனர். தாதாக்களின் வாழ்க்கையைத் திரையில் மனிதாபிமானத்துடன் காட்டியதால் அவர்கள் தன்னை ஒரு ஆத்ம நண்பராகப் பார்த்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

தாவூத் இப்ராகிமை ராம் கோபால் வர்மா பாராட்டி பேசி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் கடுமையாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர்.

Source link