மருந்து உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக மொத்த மருத்துவ துறையும் செயல்படலாமா? விலை நிர்ணய வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

புதுடில்லி: ‘மருந்துகளுக்கான எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலைக்கும், சில்லரை விற்பனையாளர்கள் கொள்முதல் விலைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பது ஏன்?’ என, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்த மருத்துவ துறையும், மருந்து உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

கேள்வி

மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 12ல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையில் வணிக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளித்தது.

இது திருப்தி அளிக்கவில்லை என கூறிய உச்ச நீதிமன்றம், ‘ஏனைய மருந்துகளுக்கும் ஏன் இதே போன்று வணிக லாப வரம்பை நிர்ணயிக்க முடியாதா?’ என, கேள்வி எழுப்பி இருந்தது. புற்றுநோய் மருந்துகளுக்கு வணிக லாப வரம்பை 30 சதவீதமாக கட்டுப்படுத்த எடுத்த முடிவால், நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மருந்துகளுக்கான எம்.ஆர்.பி., விலைக்கும், மருந்து கடைகளுக்கு அவை விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக ஒட்டுமொத்த மருத்துவ துறையும் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

எப்படி அனுமதிக்கலாம்?

ஒட்டுமொத்த நடைமுறையும் மருந்து உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவது ஏன்? தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முற்றிலும் செயலற்ற அமைப்பாக இருப்பது போல தோன்றுகிறது. இப்படியொரு நிலைமையை அரசே அனுமதிக்கிறது. அரசின் கண் எதிரிலேயே இப்படி நடக்கிறது. இதை எப்படி அனுமதிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, ”உலகிலேயே நம் நாட்டில் தான் மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன,” என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

புற்றுநோய் ஊசி ரூ.1.30 லட்சமா?

மருந்து தயாரிப்பு செலவு மற்றும் வினியோகஸ்தர் விலையை காட்டிலும், நோயாளிகளிடம் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது மருந்து வினியோகஸ்தரின் மனைவிக்கு நேர்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கூறியதாவது: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக, மருந்து வினியோகஸ்தர் ஒருவர் பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு புற்றுநோய்க்கான, ‘கீமோதெரபி’ சிகிச்சைக்கு பயன்படும் ஒரு குறிப்பிட்ட மருந்து ஊசி 11,000 ரூபாய்க்கு டீலர் விலையில் தமக்கு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதை ஏற்காமல், அந்த மருந்து ஊசிக்கு 1.30 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
இந்த பகல் கொள்ளைக்கு நியாயம் கூற முடியுமா? இவ்வளவு பெரிய வித்தியாசம் ஏன்? மக்கள் பணம் எங்கே செல்கிறது? மருந்துகள் விலையை 100 முதல் 200 சதவீதம் வரை உயர்த்தி வசூலிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Source link