அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? கணைய அழற்சிக்கு சிகிச்சை தேவை என கோர்ட்டில் மனு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரின் பேரில், முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசியல் விரோதம் காரணமாகவே தன் மீது திட்டமிட்டு இந்த பொய் வழக்கு சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனிநபர்கள் சிலர் பணம் வசூலித்ததாக மட்டுமே காவல் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர் என்றும், தான் லஞ்சம் வாங்கியதாகவோ அல்லது சட்டவிரோதமாகப் பலனடைந்ததாகவோ எந்தவொரு ஆதாரத்தையும் காவல்துறையினரால் தெரிவிக்க முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள் மீது பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழக்கமான நிர்வாக நடவடிக்கைகளே எடுக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்தச் சலுகையும் வழங்கப்படவிலலை என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

தன்னுடன் நெருக்கமாக இருப்பாகக் கூறிக்கொண்டு, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூல் செய்ததற்குத் தன்னை பொறுப்பாக்க முடியாது என்றும், சாட்சிகளின் வாக்குமூலமும் சிலர் தனது பெயரைப் பயன்படுத்தி பணம் வசூலித்ததையே காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 ஏ-ன் கீழ் ஆளுநரின் முன்அனுமதி பெறாமல் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர் மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் அவசியமாகிறது என்பதைக் குறிப்பிட்டு ஜாமீன் வழங்குமாறு கோரியுள்ளார். இந்த ஜாமீன் மனு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Source link