சென்னையில் பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த மைத்ரேயன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு நேரடியாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது. அந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று காலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மைத்ரேயன் கையெழுத்திட்ட பின்பு திருவான்மீயூர் நோக்கிச் சென்றார்.
அடையாறு இந்திரா நகர் வழியே மைத்ரேயன் வந்து கொண்டிருந்த போது,இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரை மறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மைத்ரேயன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அறிந்த அடையாறு காவல்துறையினர், அங்கு விரைந்து உயிரிழந்த மைத்ரேயனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, இச்சம்பவத்தில் நீதி வேண்டும் எனக் கூறி மைத்ரேயனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைகளில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைத்தனர். இந்த நிலையில், கொலை செய்த ஜீவா, அசாரூதின் இரண்டு பேர் தாமாக முன்வந்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்ததாகவும், ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
