பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகள் என 40 திருத்தலங்கள் உள்ளன. இந்த நாற்பது திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்வார்கள் அருளிச் சென்ற பாசுரங்கள் பற்றி தினமும் இரண்டு பாசுரங்கள் வீதம் தொடராக காணலாம். சோழ நாட்டு திருப்பதிகளில் ஒவ்வொரு தலத்திற்குரிய பாசுரங்கள் பற்றிய தகவல்களை தொகுத்து தந்திருப்பவர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள்.
ஸ்ரீரங்கம் திருத்தல பாசுரங்கள் :
முதன்மை திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில்,
பெரியாழ்வார் – 35
ஆண்டாள் – 10
குலசேகராழ்வார் – 31
திருமழிசை ஆழ்வார் – 14
தொடரடி பொடியாழ்வாழ் – 55
திருப்பாணாழ்வார் – 10
திருமங்கையாழ்வார் – 73
பொய்கை ஆழ்வார் – 1
பூதத்தாழ்வார் – 4
பேயாழ்வார் – 2
நம்மாழ்வார் – 12
மொத்தம் 247 பாசுரங்கள் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் திருத்தலம் :
ஸ்ரீரங்கத்தில் ஆதிசேஷ சயனத்தில் தெற்கு பார்த்த திருக்கோலத்தில் ரங்கநாதர் அருள்பாலிக்கிறார். தெற்கே திருமுக மண்டலம். உற்சவர் – நம்பெருமாள்; தாயார் – ஸ்ரீரங்கநாயகி; விமானம் – ப்ரணவாக்ருதி; தீர்த்தம் – வேதசிருங்கம் (சந்திர புஷ்கரணி தீர்த்தம்). மாசி மாத தெப்பத் திருவிழா, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, வருடத்திற்கு மூன்று முறை பிரம்மோற்சவங்கள், மாதந்தோறும் உற்சவங்களும் சிறப்பாக நடைபெறும் புண்ணிய ஷேத்திரம் ஆகும்.
ஸ்ரீரங்கம் பாசுரம் – 1 :
பெரியாழ்வார் திருமொழி 2-10 ஏழாம் திருமுறை:
“கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக்
கண்டா லொக்கும் கண்கள் உருவுடையாய்!
உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்,
திருவுடையாள் மணவாளா!
திருவரங்கத்தே கிடந்தாய், மருவி மனம்
கமழ்கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்”
பொருள் :
கருமை நிறமுடைய மேகங்கள் தண்ணீராய் மழையை பொழிய காத்திருக்கும் மேகங்களை பெரியாழ்வார், பெருமாளுடன் ஒப்பிட்டு சொல்கிறார். கருமேங்களின் அழகை எம்பெருமானின் திருமேனி அழகுடன் ஒப்பிட்டு மகிழ்கிறார். மேகங்களின் கருமை, பெருமாளின் தெய்வீக அழகை நினைவூட்டுவதாக இருப்பதாக பெரியாழ்வார் பாடுகிறார். உலகம் முழுவதையும் காக்கும் தெய்வீக அவதாரம், கருணை மழை பொழியும் கருமேகங்கள் போன்றவை. இந்த பாசுரத்தை பொருள் உணர்ந்து படித்தால் தெய்வீக அதிர்வலைகளை உணர முடியும்.
பாசுரம் – 2 :
” சீமாலிக வனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் ,
சாமா றவனைநீ யென்னிச் சக்கரத் தால்தலை கொண்டாய் ,
ஆமாறறியும் பிரானே ! அணி யரங்கத்தே கிடந்தாய்,
ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வா”
பொருள் :
இது பூச்சூடல் பாசுரம். சீமாலிக வனோடு தோழமை என்றால் பெருமாளுக்கும் நமக்கும் இடையேயான பந்தம் எப்போதும் பிரிக்க முடியாதது. பெருமாளோடு நட்பு வைத்திருப்பதே பெரிய விஷயம். ரங்கனை கண்ணார தரிசனம் செய்து, மனதில் அவனது திருவுருவத்தை பதிய செய்வது மிகப் பெரிய புண்ணியம். அப்படி ரங்கனை தரிசிப்பதால் நல்லறிவு, நன்னெறி கிடைக்கும். நல்ல அறிவும், நல்ல பண்பும் உடையவர்களுடன் தான் தோழமை பாராட்ட அனைவரும் விரும்புவோம். அப்படி பக்தர்கள் பெருமாளுடன் தோழமை வைத்துக் கொள்ள விரும்புவார்கள். நீ என்னுடன் இருந்தால் அதுவே போதும் என தேவர்களும் பெருமாளுடன் நட்பு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உனக்கு பூச்சூட்டி அழகு பார்க்க காத்திருக்கிறோம். நீ வா ரங்கா என அழைப்பது போல் பெரியாழ்வார் இந்த பாசுரத்தை பாடி உள்ளார்.
– கட்டுரையை வழங்கியவர்
டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,
சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.
மொபைல் எண்: 9087426655
