மீண்டும் தலைதூக்கிய 90களின் ‘அரிவாள் கலாச்சாரம்’! பட்டப்பகலில் பட்டாக் கத்திகளுடன் அலையும் கும்பல்

சென்னை: தமிழ்நாட்டில் 1990-களில் கூலிப்படைகளும், ரவுடிக் கும்பல்களும் பட்டாக் கத்திகளையும் அரிவாள்களையும் வீசிப் பொதுமக்களை அச்சுறுத்திய “அரிவாள் கலாச்சாரம்” நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே காவல்துறையினரால் ஒடுக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் தவெக அரசின் கீழ் அதே கொடூரக் கலாச்சாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பெரும்பாலான குற்றங்களில் பொதுவான ஓர் அதிர்ச்சி ஒற்றுமை என்னவென்றால், குற்றவாளிகள் அனைவரும் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களை விட, பட்டாக் கத்திகள் மற்றும் நீண்ட அரிவாள்களைக் கொண்டு மிகக் கொடூரமாகத் தாக்கி வருவதுதான். நேற்று முன்தினம் ராயப்பேட்டை சார்மினார் பிரியாணி கடையில் இரு சிறுவர்கள் பட்டாக் கத்தியுடன் புகுந்து காசாளரைத் தாக்கிய அதிர்ச்சி விலகுவதற்குள், நேற்று மாலை சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வழிமறிக்கப்பட்டு பட்டாக் கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தலைநகரையே நிலைகுலைய வைத்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவரை மர்மக் கும்பல் நடுவழியில் வழிமறித்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த நீண்ட அரிவாள் மற்றும் பட்டாக் கத்திகளை உருவிய அந்தக் கும்பல், ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாக வெட்டியுள்ளது. தன்னைத் தற்காத்துக் கொள்ள அவர் அலறியடித்து ஓட முயன்றும் விடாமல் துரத்திச் சென்று வெட்டிச் சாய்த்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்கள் மற்றும் வாகனங்கள் விரைந்து செல்லும் ஒரு பிரதான சாலையில், பட்டப்பகலிலும் மாலையிலும் சர்வ சாதாரணமாக அரிவாள்களை உருவித் தாக்கும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் தைரியம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது.

கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பதிவாகியுள்ள பல முக்கியக் குற்றங்களை உற்றுநோக்கினால், இந்த அரிவாள் கலாச்சாரம் மாநிலம் தழுவிய அளவில் மீண்டும் பரவியிருப்பது தெளிவாகத் தெரிகிறது:

வாலாஜாபேட்டை நெடுஞ்சாலை: 34 வயது இளைஞர் ஜீவா கழுத்து, தாடை என உடல் முழுவதும் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சடலமாக வீசப்பட்டார்.

ராயப்பேட்டை பிரியாணி கடை: பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் கைகளில் நீண்ட கத்திகளுடன் காசாளரை வெட்டிவிட்டுப் பணத்தைச் சுருட்டிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகிப் பொதுமக்களை அதிர வைத்தது.

குலசேகரப்பட்டினம் & கோவை துயரங்கள்: திருவிழா நெரிசலில் கற்களாலும் ஆயுதங்களாலும் மோதிக்கொள்ளும் வன்முறைகளும், கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழல்களும் தொடர்கின்றன.

சென்னையில் தொடரும் பழிக்குப் பழி: பழைய பகையைத் தீர்த்துக்கொள்ளவும், கஞ்சா மற்றும் மாமூல் தகராறுகளுக்காகவும் இளைஞர்கள் அரிவாள்களைத் தூக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

பள்ளி, கல்லூரிப் பருவத்தைக் கூட எட்டாத இளம் சிறுவர்கள் கைகளில் மிக எளிதாகப் பட்டாக் கத்திகள் புழங்குவதும், அதனைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ விட்டு மிரட்டுவதும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாநிலத்தில் ஆயுதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையின் அடிப்படைக் கடமை. ஆனால், சமையல் தேவைகளுக்காக அல்லது விவசாயக் கருவிகள் செய்வதற்காக உள்ள பட்டறைகளில் சட்டவிரோதமாக அடித்துத் தரப்படும் பட்டாக் கத்திகளை ரவுடிக் கும்பல்கள் வாங்கிப் பதுக்கி வைப்பதை உள்ளூர் உளவுத்துறை முற்றிலுமாக மோப்பம் பிடிக்கத் தவறிவிட்டது.

வாகனத் தணிக்கைகள் வெறும் தலைக்கவசம் (ஹெல்மெட்) சோதனையோடு நின்றுவிடுவதால், இருசக்கர வாகனங்களில் இருக்கைக்கு அடியிலும் பைகளிலும் பட்டாக் கத்திகளை மறைத்து வைத்துக்கொண்டு ரவுடிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். காவல்துறையிடம் மாட்டுவோம் என்ற அச்சமே இல்லாத அளவிற்கு ரோந்துப் பணிகளும் கண்காணிப்புகளும் சுணக்கமடைந்துள்ளன.

தலைநகர் சென்னையே அரிவாள் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த அவல நிலையிலும், ஆளும் அரசு இதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தி உச்சத்தை எட்டியுள்ளது.

டிஜிபி, உள்துறைச் செயலாளர் ஆகியோரை அழைத்து ஒரு தீவிர ஆய்வுக் கூட்டத்தைக் கூட முதல்வர் இன்னும் நடத்தாததும், உளவுத்துறை தரும் தினசரி அறிக்கைகள் (TSR) முக்கியத்துவம் பெறாமல் புறந்தள்ளப்படுவதும் சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாகப் படுக்க வைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

“மாநிலத்தின் எந்தவொரு மூலையிலும் மக்கள் கையில் அரிவாளுடன் சுற்ற முடியாது” என்ற இரும்புக்கரம் கொண்ட எச்சரிக்கையை அரசு விடுக்கத் தவறினால், 90-களின் கொடூர ரவுடி கலாச்சாரத்திற்குத் தமிழகம் மீண்டும் பின்னோக்கிச் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை. ரவுடிகளைத் தேடிப்பிடித்து ஆயுதங்களை பறிமுதல் செய்யும் அதிரடி வேட்டையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.