‘இனி தப்பித்தால் துப்பாக்கிச் சூடு தான்…’ – சிறைத்துறை எடுத்த அதிரடி முடிவு!

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை தாக்கி பிரதான நுழைவுவாயிலைத் திறந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர். 

இதனையடுத்து, அவர்களைப் பிடிப்பதற்காக தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் சிறப்பு பணிக் குழுவினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், முதற்கட்டமாக, பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்க பிரசாத் உள்ளிட்ட 5 கைதிகள் பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து, ட்ரோன்கள் மூலம் சிறையைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, மேலும் 8 கைதிகள் கண்டறியப்பட்டுப் பிடிக்கப்பட்டனர். இவர்களுடன் தற்போது வரை மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 4 கைதிகளையும் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சிறையில் இருந்து தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு சிறையின் பாதுகாப்பை அதிகரிக்க சிறைகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உயர் கோபுரத்தில் இருந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதே போல், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட முயன்றால் துப்பாக்கி ஏந்திய போலீசார், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்களை சுட்டிப்பிடிக்கலாம் என உத்தரவு விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறை காவலர்கள் பற்றாக்குறை இருக்கும் சூழலில் மேலும் சிறை காவலர்கள் நியமிக்கப்பட்டு மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கூடுதல் பாதுகாப்பை அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரவை சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ளார்.