சென்னை: சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு ‘பாஸ்டேக்’ அடிப்படையிலான புதிய வருடாந்திர ‘பாஸ்’ திட்டம் வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது . இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட விவரங்களை பார்ப்போம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்காகவே மாதாந்திர பாஸ் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்கள் வைத்துள்ளவர்கள் ஆதார் முகவரி உள்ளிட்ட தங்கள் முகவரி சான்றிதழை சமர்பித்து மாதம் ரூ.350 செலுத்தி டிஜிட்டல் முறையிலான ‘பாஸ்’களை பெற்று, புதுப்பித்து பயன்படுத்தி வருகிறார்கள்.
சுங்கச்சாவடிகளை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் இந்த கட்டணத்தை புதுப்பிப்பதற்கு கடுமையான சிரமத்தை சந்திக்கிறார்கள் என நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார்கள் அதிகரித்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய ‘பாஸ்டேக்’ அடிப்படையிலான வருடாந்திர ‘பாஸ்’ திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அரசிதழையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
நகராட்சி அல்லது நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ரூ.1,500-ம், நகராட்சி அல்லது நகர எல்லைக்கு உள்ளே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ரூ.3,000-ம் வருடாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சுங்கச்சாவடியை ஒட்டி 20 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பவர்கள் ஆதார் மற்றும் முகவரி சான்றிதழ் உள்ளிட்ட தகுந்த ஆவணங்களை குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் சமர்ப்பித்து இந்த வருடாந்திர பாஸ் பெறலாம் என்று நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடாந்திர பாஸ் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. சுங்கச்சாவடியின் அருகாமையில் சர்வீஸ் சாலை அல்லது மாற்றுப்பாதை இருக்கும்பட்சத்தில் உள்ளூர் மக்களுக்கான வருடாந்திர சலுகை பாஸ் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
