”20 ரூபாய் கச்சேரிக்கு 20 லட்சம் செலவா?”; சிறிய கவனக்குறைவு, பெரிய இழப்பு

தொழிலதிபர் ஒருவர் கச்சோரி சாப்பிடுவதில் மும்மரமாக இருந்ததால் ரூ.20 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.   

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நேற்று சம்பாலால் எனும் தொழிலதிபர் கச்சோரி சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது, ரூ.20 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்த பையை, தனது ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் வைத்து விட்டு கச்சோரி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.   

அந்த சமயத்தில், மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இருவர் பணம் வைக்கப்பட்டிருந்த பையைத் திருடிச்சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், பணத்தைப் பறிகொடுத்த சம்பாலால், சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, சம்பாலால் தனது ஸ்கூட்டரில் அமர்ந்து கச்சோரி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது, மற்றொரு ஸ்கூட்டரில் அங்கு வந்த இரண்டு நபர்களில், பின் புறத்தில் இருப்பவர் அந்த பணப்பையை எடுத்துக்கொள்கிறார். பின்னர், அவர்கள்  மிக வேகமாக அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர்.  

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சம்பாலால் கையில் கச்சோரியை பத்திரமாக பிடித்துக்கொண்டே, நடந்தே அந்த திருடர்களைத் துரத்துகிறார். எனினும், அவர்கள் ஸ்கூட்டரில் வேகமாகச் சென்று தப்பிச்சென்றுவிட்டனர். இந்நிலையில், தலைக்கவசம் அணிந்திருந்த இருவரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. 

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைராலாகி வருகின்றன. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், ரூ.20 மதிப்புள்ள கச்சோரிக்காக ரூ.20 லட்சத்தைப் பறிகொடுத்துள்ளார் என வருத்தத்தைப் பதிவுசெய்துவருகின்றனர். மேலும் சிலர், 20 ரூபாய் கச்சோரிக்கு 20 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார் எனக் கிண்டல் செய்து வருகின்றனர். எனினும், இவ்வளவு பணத்தை ஒருவர் இந்த அளவுக்கு அசால்டாக வைத்திருப்பது மிகவும் தவறு என்றும், கையில் மதிப்புமிக்க பொருட்கள் இருக்கும்போது உஷாராக இருப்பது மிகவும் அவசியம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.