‘கரூரிலேயே கதையை முடித்திருந்தால்…’ – மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் அதிரடி கைது!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக சிறைக்கு அழைத்து வரப்பட்ட அன்பில் மகேஸைச் சந்திக்க திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் புழல் சிறை வாசலில் திரண்டனர். அப்போது அன்பில் மகேஸின் தீவிர ஆதரவாளரான வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என்பவர், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு ஆவேசமாக முழக்கமிட்டார். அதில் அவர், ‘தலைவரே அன்னைக்கே அவன கரூரிலேயே போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்) இந்த நிலைமை வந்திருக்குமா?’ என அருகில் இருந்தவர்களிடமும், அன்பில் மகேஸை நோக்கியும் ஆவேசமாகக் கத்தியுள்ளார்.

இந்த மிரட்டல் பேச்சு தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டது தற்போதைய தமிழக முதல்வர் விஜய் (தமிழக வெற்றிக் கழகத் தலைவர்) என்பதும், கரூரில் ஏற்கனவே நடந்த கூட்ட நெரிசல் நிகழ்வை முன்வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, தவெக மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றது. இது முதல்வர் விஜய்க்கு விடுக்கப்பட்ட நேரடி மிரட்டலாகக் கருதப்பட்டதால், சென்னை புழல் காவல் நிலைய போலீசார் டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். டீட்டா சரவணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதனால் அவரைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், விழுப்புரத்தில் பிரேம் என்பவர் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.