இம்ரான் கான் வழக்கு – நீதிமன்றம் இடைக்காலத் தடை!

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் வாக்குத்திருட்டு உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் சிஜேபி அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது. இதில் பாலிவுட் நடிகர் இம்ரான் கானும் கலந்து கொண்டார். 

அமெரிக்காவில் பிறந்த இம்ரான் கான் இந்திய வம்சாவளி வெளிநாட்டவர் (ஓசிஐ) என்ற அடையாள அட்டையை வைத்துள்ளார். இது அவருக்கு இந்தியாவில் வசிக்கவும் பணியாற்றவும் அனுமதி அளிக்கிறது. ஆனால், அரசியல் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட அனுமதிப்பதில்லை. அப்படி ஈடுபட்டால் அது வெளிநாட்டினர் சட்டப்பிரிவின்படி விதிமீறலாகும். இதனால் விதிமீறலின் பிரிவில் பாஜக தலைவர் கிரீட் சோமையா புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

பின்பு இந்தியாவை விட்டு இன்றைய தேதிக்குள்(அக்.28)  வெளியேற வேண்​டும் என வெளி​நாட்​டினர் பிராந்​தி​யப் பதிவு அலு​வல​கம் கடந்த 14ஆம் தேதி நோட்​டீஸ் பிறப்​பித்​தது. இதை எதிர்த்து நடிகர் இம்​ரான் கான் மும்பை உயர் நீதி​மன்றத்தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி. திரிபாதி மற்​றும் நீதிபதி அத்​வைத் சேத்னா அடங்​கிய அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் சொசிலிட்டர் ஜெனரல் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்​கப்​பட்​டது. இதனால் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேறும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.