38 பேரை கொன்று சமைத்து சாப்பிட்ட மோசஸ் யார் தெரியுமா? வெலவெலத்து பார்க்கும் உகாண்டா

கம்பாலா: 15 ஆண்டுகளில் 38 பேரை கொன்று, அவர்களின் உடல்களை சாப்பிட்டிருக்கிறாராம் ஒருவர்.. இந்த 15 வருடங்களில், இந்த நபர் இப்போதுதான் முதன்முறையாக போலீசிடம் சிக்கியிருக்கிறாரா என்றால் இல்லை… பல வருடங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டவர்.. ஆனால் காவலில் இருந்து தப்பிவிட்டவர்.. அந்த நபர் இப்போது மீண்டும் பிடிபட்டுள்ளார். யார் இந்த நபர்? உகாண்டாவில் நடந்த இந்த வழக்கின் பின்னணி என்ன?

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் முஜுரிசி மோசஸ்.. 2010 முதல் 2025 வரையிலான 15 வருடங்களில், மசாகா, இபாண்டா, காசோ ஆகிய பகுதிகளில் வரிசையாக கொலைகளை செய்துள்ளார்..

வீடுகளுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை வெட்டிக் கொன்றாராம், சிலரை ஆசை வார்த்தை கூறி வரவழைத்துக் கொன்றாராம்.. அத்துடன் கொல்லப்பட்டவர்களின் உடல்களை சமைத்தும் சாப்பிட்டுள்ளதாக மோசஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இதையடுத்து போலீசார் இவரை பல வருடம் முன்பே சுற்றிவளைத்து பிடித்து ஜெயிலில் அடைத்தனர்.. ஆனால், மோசஸ் எகிறி தப்பிவிட்டார்.. இதற்கு ஒரு போலீஸ் அதிகாரியும் உள்ளூர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் அவரைத் தப்பிக்க உதவியிருக்கிறார்கள். மோசஸின் கைவிலங்கையும் அவிழ்த்து தப்பிக்க விட்டுள்ளார்கள்.. இதற்காக அந்த 2 பேருக்கும் மோசஸ் 1 லட்சம் உகாண்டா ஷில்லிங் கொடுத்தாராம்..

அப்போதிருந்து மோசஸை போலீசார் வலைவீசி தேடி வந்தன நிலையில், இந்த பயங்கர குற்றவாளியைதான் போலீசார் இப்போது மீண்டும் கைது செய்துள்ளனர்.. இவர் கைது செய்யப்பட்டதை உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா அக்டோபர் 26-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் கொலை செய்யும் பாணியே வித்தியாசமாக இருக்குமாம்.. வீடுகளின் சுவர்களில் ஓட்டை போட்டு, அதற்குள் நுழைந்து, வீட்டிலிருப்பவர்களை கொல்வாராம்.. சில சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரையும் கொன்றிருக்கிறார்கள்.. பெண்களாக இருந்தால், அவர்களிடம் காதல் வலையை வீசுவாராம்.. காதலிப்பதாக சொல்லி, அவர்களை நம்ப வைத்து, அதற்கு பிறகு பெண்களை கொல்வாராம்.

மொத்தம் 38 பேரைக் கொன்றதாகவும் அவர்களின் உடல்களை சாப்பிட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும்.. இந்தக் கொலைகளில் என்ன நடந்தது, ஒவ்வொரு சம்பவத்துக்கும் யார் காரணம் என்பது தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதால் விசாரணை நடக்கிறது.

இப்படித்தான், உகாண்டாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஃப்ரெட் முஜுலிசி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.. இவரும் 17 கொலைகளை செய்தவராம்.. ஆனால் இவரும் போலீசிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.. அதனால் அந்த நபர்தான், இப்போது கைதாகி உள்ள மோசஸா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.. அதனால் அதை பற்றியும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

அதேபோல உகாண்டாவின் சில பகுதிகளில் இதற்கு முன்பும் இப்படி சீரியல் கொலைகள் நடந்துள்ளன. குறிப்பாக, மசாகா மற்றும் ரகாய் பகுதிகளில் 2012, 2013-ம் ஆண்டுகளிலும் கொலைகள் நடந்துள்ளன.. ஆனால், அந்த பழைய கொலைகள் அனைத்துக்கும் மோசஸ்தான் காரணமா என்றும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி போலீசாரையே இப்போதுவரை திணறடித்து வரும் கொலைகார மோசஸை, பொதுமக்கள் முன்னிலையில் விசாரித்து, மரண தண்டனை நிறைவேற்றுவோம் என்று ராணுவத் தளபதி முஹூசி கைனெருகாபா உறுதி தந்துள்ளார். கொலையாளி என சந்தேகிக்கப்படும் மோசஸின் போட்டோவையும் பொதுவெளியில் ஷேர் செய்துள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், 15 ஆண்டுகளில், 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் மாமிசத்தை சமைத்து தின்றதாக, கொடூர சீரியல் கில்லர், கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை தந்து வருகிறது.