தெற்கு ரயில்வே நிர்வாகம் தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கும் வகையில், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு மூன்று ஒருவழிச் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது.
அக்டோபர் 30 சிறப்பு ரயில் (வண்டி எண்: 06136):
அக்டோபர் 30-ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அக்டோபர் 31 சிறப்பு ரயில் (வண்டி எண்: 06138):
அக்டோபர் 31-ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மதுரையில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
நவம்பர் 1 சிறப்பு ரயில் (வண்டி எண்: 06188):
நவம்பர் 1-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:15 மணிக்குத் தாம்பரம் போய் சேரும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பினால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகள் பெரிதும் பயனடைவர்.
