கவனம் ஈர்த்த வெள்ளி இ.டி.எப்.,: ஒரே நாளில் 9% விலை உயர்வு!

சமீபநாட்களாக அமைதியாக இருந்த தங்கம், வெள்ளி சந்தைகள் நேற்று ஒரே நாளில் திடீரென சூடுபிடித்தன. குறிப்பாக, வெள்ளி விலை தங்கத்தை விட வேகமாக உயர்ந்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

சர்வதேச கமாடிட்டி சந்தையான காமெக்ஸில், வெள்ளி விலை 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இதன் தாக்கமாக, இந்தியாவில் எம்.சி.எக்ஸ்., சந்தையிலும், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்., விலை வேகமாக அதிகரித்தது.

எம்.சி.எக்ஸ்., சந்தையில், 2026 ஏப்ரல் ஒப்பந்தத்துக்கான தங்கம் பியூச்சர்ஸ், 10 கிராமுக்கு 1,57,620 ரூபாயாக வர்த்தகமாகி, கிட்டத்தட்ட 1.40 சதவீத உயர்வை கண்டது. இதேபோல், மார்ச் 2026 ஒப்பந்தத்துக்கான வெள்ளி பியூச்சர்ஸ், கிலோவுக்கு 2.61 லட்சம் ரூபாயை கடந்த நிலையில், கிட்டத்தட்ட 5 சதவீதம் உயர்ந்தது.

விலை உயர்வு எதிரொலியாக, பெரும்பாலான வெள்ளி இ.டி.எப்., ஒரே நாளில் 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தது. டாடா, நிப்பான் இந்தியா, ஜீரோதா, குரோ, யு.டி.ஐ., எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களின் வெள்ளி இ.டி.எப்.,களில் வலுவான ஏற்றம் காணப்பட்டது.

இதை ஒப்பிடும்போது, தங்க இ.டி.எப்.,களின் உயர்வு 2 முதல் 3 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. நேற்றைய வர்த்தக நாளில் சந்தையின் முழு கவனத்தையும் வெள்ளியே பெற்றது.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், ‘டாலர் மதிப்பு சரிவடைந்ததை தொடர்ந்து, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர், பிப்., 4க்கு பின் மிகக்குறைந்த நிலைக்கு சரிந்துள்ளது. 5,000 டாலர் அளவுக்கு கீழ் வந்த தங்கத்தை முதலீட்டாளர்கள் மீண்டும் வாங்க துவங்கியதும், விலை உயர ஆரம்பித்துள்ளது.Image 1533924‘இந்த வாரம் வெளியாக உள்ள அமெரிக்க வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

‘மேலும், 2026ம் ஆண்டில் குறைந்தது இரண்டு முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும், முதல் குறைப்பு ஜூன் மாதத்தில் நடக்கும் என்றும் சந்தை எதிர்பார்க்கிறது.

‘வட்டி விகிதம் குறையும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள் பொதுவாக நல்ல செயல்பாட்டை காட்டும். வேலைவாய்ப்பு தரவுகளில் பலவீனம் தென்பட்டால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Source link