டி.வி.எஸ் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: மல்லிகா, லட்சுமி சுமூகத் தீர்வை விரும்பினாலும் ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ

ஒருபுறம் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் குடும்பப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக மல்லிகாவும் லட்சுமியும் தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் குடும்பச் சொத்துப் பிரிவினைத் தகராறில் ஒருவருக்கொருவர் எதிராகச் சென்னை நீதிமன்றங்களில் டி.வி.எஸ் குடும்பத்தினர் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆங்கிலத்தில் படிக்க:

டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (டாஃபே – TAFE) தலைவரும் மேலாண் இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் மற்றும் அவரது மகள் லட்சுமி வேணு ஆகியோர், வெளிப்படையான விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் குடும்பத்திற்குள் சுமுகமான தீர்வைக் காண விரும்புவதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இருப்பினும், குடும்பச் சொத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சை தொடர்வதால், டி.வி.எஸ் குடும்ப உறுப்பினர்கள் சென்னை நீதிமன்றங்கள் இரண்டில் ஒருவருக்கொருவர் எதிராகக் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன், அவரது மனைவி மல்லிகா சீனிவாசன், அவர்களது பிள்ளைகளான லட்சுமி வேணு மற்றும் சுதர்சன் வேணு ஆகியோர் அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பல கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்திலும் வர்த்தக நீதிமன்றத்திலும் தலா 4 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மோதல் தொடரும் பட்சத்தில் சாத்தியமான சட்ட நடவடிக்கைகளுக்குக் குடும்ப உறுப்பினர்கள் தயாராகி வருவதை இது காட்டுகிறது.

இந்தப் பிரச்னையில், வேணு சீனிவாசனும் அவரது மகன் சுதர்சன் வேணுவும் ஒரு தரப்பாகவும், வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு மற்றும் மனைவி மல்லிகா சீனிவாசன் ஆகியோர் மறு தரப்பாகவும் உள்ளனர். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், தங்கள் தரப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காகவே குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கருத்து வேறுபாடுகளைச் சுமுகமாகத் தீர்ப்பதில் மல்லிகா சீனிவாசன் மற்றும் லட்சுமி வேணுவின் நிலைப்பாட்டை அவர்களின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் மீண்டும் உறுதிப்படுத்தினார். “ஏற்கனவே இணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, வெளிப்படையான விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வைக் காண வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை லட்சுமி வேணுவும் மல்லிகா சீனிவாசனும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்” என்று செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பிரச்னையும் சட்ட முன்னெச்சரிக்கையும்:

மல்லிகா சீனிவாசனும் லட்சுமி வேணுவும் தகராறைத் தீர்க்கப் பேச்சுவார்த்தைகளையே தொடர்ந்து விரும்புகிறார்கள் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. இருப்பினும், கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதானது, வரவிருக்கும் சாத்தியமான நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்நோக்கித் தரப்பினர்கள் சட்டப் முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது. இரு நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வரும் பட்சத்தில் தங்களின் பக்க நியாயங்களைப் பாதுகாக்க அவர்கள் தயாராகி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

கேவியட் மனு என்பது, ஒருவரின் நலன்களைப் பாதிக்கக்கூடிய விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், தன் தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் ஒரு சட்டப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பாகும். நீதிமன்றம் தன் தரப்பைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பித்து விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த இந்த மனு பயன்படுகிறது.

‘நியாயமான பொருளாதார உரிமை’:

2020-ம் ஆண்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுப் பின்னர் அமல்படுத்தப்பட்ட பெரிய டி.வி.எஸ் குடும்பப் பிரிவினை, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய செயல்முறையின் மூலம் நடத்தப்பட்டது என்று லட்சுமியும் மல்லிகாவும் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இருப்பினும், வேணு சீனிவாசன் குடும்பத்திற்குள் இருக்கும் பொருளாதார நலன்களுக்காக அதுபோன்ற செயல்முறை நடக்கவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.

“முக்கியமான பிரச்னை என்னவென்றால், முறையான மற்றும் தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிர்வாகப் பதவிகளைப் பற்றியது அல்ல. நிலுவையில் உள்ள நியாயமான பொருளாதார உரிமையை நேர்மையாக அங்கீகரிப்பது பற்றியதே ஆகும்” என்று அவர்கள் கூறினர்.

மல்லிகா சீனிவாசன் ‘டாஃபே’ (TAFE) நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் உள்ளார், அதே நேரத்தில் லட்சுமி அதன் துணைத் தலைவராக உள்ளார். லட்சுமி சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். சுதர்சன் வேணு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் உள்ளார். டாஃபே நிறுவனம் அமல்கமேஷன்ஸ் (Amalgamations) குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது ஒரு தனிப்பட்ட குடும்ப வணிகக் குழுமமாகும், அதில் மல்லிகா சீனிவாசன் ஒரு பங்குதாரராக உள்ளார்.

வேணு சீனிவாசன் குடும்பத்திற்குள்ளான பொருளாதாரத் தீர்வில் சாஃபே நிறுவனத்திற்கு எந்தப் தொடர்பும் இல்லை என்றும், அதை இதனுடன் போட்டு குழப்பக் கூடாது என்றும் மல்லிகா சீனிவாசன் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளார்.

Source link