தமிழகச் சிறைகளில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களைத் தடுக்க, பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இனி சிறைகளின் கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தேனி மற்றும் புழல் சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்கள் இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. மொத்தம் 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், 13 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சிறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை கண்காணிப்புக் கோபுரங்களில் பணியாற்றிய காவலர்கள் வாக்கி-டாக்கி, பைனாகுலர் போன்ற கருவிகள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இனி அவர்களுக்கு 7.62 மி.மீ. SLR ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டு பாதுகாப்புப் பணி வலுப்படுத்தப்பட உள்ளது. இந்தத் துப்பாக்கிகள் மூலம் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைக் குறிவைக்க முடியும்.
கைதிகள் சிறைச்சுவரைத் தாண்டித் தப்ப முயற்சிப்பது, காவலர்களைத் தாக்குவது அல்லது சிறைக்குள் வன்முறை ஏற்படுவது போன்ற அவசர நிலைகளில் மட்டுமே துப்பாக்கிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே காவலர்கள் செயல்பட வேண்டும்.
இதனுடன், தமிழகத்தில் உள்ள மத்திய, மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளில் பாதுகாப்புத் தணிக்கையும் நடைபெற்று வருகிறது. சிறைச்சுவர்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், பாதுகாப்புக் கருவிகள் உள்ளிட்டவற்றின் நிலை ஆய்வு செய்யப்பட்டு, கண்டறியப்படும் குறைபாடுகளைச் சரிசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் சிறைத்துறை பரிசீலித்து வருகிறது. சமீபத்திய தப்பியோட்டச் சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகச் சிறைகளின் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
Also Read: “குழந்தைங்க வேண்டாம்.. கள்ளக்காதல் தான் முக்கியம்!” 3 குழந்தைகளுக்குத் தந்தை, 5 குழந்தைகளுக்குத் தாய் செய்த காரியம்!
