சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இப்போது நடந்து முடிந்த சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த 11 சட்ட மேலவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்ற, இந்த 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மொத்தமுள்ள 11 இடங்களில் பாஜக 5 இடங்களிலும், சமாஜ்வாதி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாரணாசி ஆசிரியர்கள் தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி சமாஜ்வாதி வேட்பாளர் லால் பிஹாரி வெற்றி பெற்றுள்ளார்.
தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் பிரமோஸ் மிஸ்ரா, கடந்த 2020ம் ஆண்டில் சுயேச்சையாகக் களமிறங்கி வெறும் 936 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால், தற்போது பாஜகவில் களமிறங்கி 4,898 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்து இருப்பது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவைத் தொடர்ந்து, இது உத்திர பிரதேசத்தில் பாஜக வீழ்ச்சியடைவதைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
