மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம், ஏப்ரல் 2, 2030 வரை உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த 14-ம் தேதி மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புவதாக தனது ராஜினாமா கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் எப்போது?
எல்.முருகன் ராஜினாமா செய்ததை அடுத்து காலியான மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி, அக்.26 முதல் நவ.2 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். நவ.3-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்படும். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை நவ. 5 வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நவ. 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்பாளர் அறிவிப்பு
வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் 5 தினங்களே உள்ள நிலயில் பாஜக வேட்பாளரை அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக உள்ள ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ஹர்தீப் சிங் பூரியின் எம்பி பதவிக்காலம் வரும் நவம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
