செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, அதுவே பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய AI உதவக்கூடும் எனக் கூறும் அதே நிறுவனம், கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் தனது முதலீட்டாளர்களுக்கான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொள்ளத் தயாராகி வரும் ஆந்த்ரோபிக், இதற்காக வெளியிட்டுள்ள ஆவணங்களில் AI தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு ஆபத்துகளை விரிவாக விளக்கியுள்ளது. நிறுவனத்தில் முதலீடு செய்வது எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்றாலும், அதனுடன் தொடர்புடைய அபாயங்களையும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.
AI அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, அவற்றைப் பிரதியெடுத்து ஆபத்தான நோக்கங்களுக்குப் பயன்படுத்தினாலோ அல்லது மனிதக் கண்காணிப்பு குறைவான நிலையில் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டாலோ, மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் AI தவறாகப் பயன்படுத்தப்படுவது முக்கிய ஆபத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவம், உயிரியல் ஆராய்ச்சி, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, சட்டம், நிதி மற்றும் அரசின் முக்கிய முடிவுகள் போன்ற துறைகளில் AI பயன்படுத்தப்படும்போது, அதன் தவறான செயல்பாடுகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் பயனரின் அறிவுறுத்தல்களுக்கு மாறாகச் செயல்படுவது, எதிர்பாராத முடிவுகளை உருவாக்குவது அல்லது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அபாயங்களும் உள்ளன. AI அமைப்புகளின் திறன் அதிகரித்து, வெளிப்புறக் கணினி அமைப்புகளை அணுகும் அனுமதிகளும் தன்னாட்சி அதிகாரமும் விரிவடையும்போது இந்த ஆபத்துகள் மேலும் அதிகரிக்கலாம் என ஆந்த்ரோபிக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அபாயங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும், AI அமைப்புகளில் உருவாகும் சில நடத்தைகளை முன்கூட்டியே கணிப்பது எளிதல்ல என்றும் தெரிவித்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்படுவதை AI அமைப்புகள் உணரும்போது அவற்றின் செயல்பாடுகள் மாறுபடக்கூடும் என்பதால், விரிவான கண்காணிப்பு முறைகள்கூட எல்லா நேரங்களிலும் நம்பகமானதாக இருக்காது என்ற கவலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
AI பயன்பாட்டின் தாக்கம் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தொடர்ந்து AI உடன் தொடர்புகொள்வது மனிதர்களின் மனநலம், சிந்திக்கும் திறன் வளர்ச்சி மற்றும் சமூகப் பழக்கவழக்கங்களில் எத்தகைய நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்த்ரோபிக் வெளியிட்டுள்ள முதலீட்டாளர் ஆவணத்தில் மொத்தம் 94 பக்கங்கள் அபாயங்கள் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. AI தொடர்பான பாதிப்புகள் நிறுவனத்தின் நற்பெயர், வணிகம் மற்றும் நிதிநிலையையும் பாதிக்கக்கூடும் என்பதால், இவை முதலீட்டாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
அதே நேரத்தில், AI மூலம் மனிதகுலத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் நிறுவனம் எடுத்துரைத்துள்ளது. புற்றுநோய், அல்சைமர் நோய், இதய நோய்கள் மற்றும் அரிய மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை கண்டுபிடிப்புகளை AI விரைவுபடுத்தக்கூடும் என்பது அதன் எதிர்பார்ப்பு.
IPO மூலம் புதிய முதலீடுகளைத் திரட்டுவதுடன், ஏற்கெனவே முதலீடு செய்துள்ள அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சில பங்குகளை விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதியை AI தொழில்நுட்பத்தை இயக்குவதற்குத் தேவையான கணினித் திறன், தரவு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது.
AI தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் வளர்ச்சியுடன் இணைந்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான சவால்களையும் அலட்சியப்படுத்த முடியாது என்பதை ஆந்த்ரோபிக்கின் இந்த எச்சரிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
Also Read: ட்ரோன் மூலம் வேட்டை! தேனி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 13 பேர் பிடிபட்டது எப்படி?
