ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு தொடர்பான வழக்கில் திமுக பிரமுகர் ராம்குமாரின் ஜாமீன் மனுவை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய 7,515 சதுர அடி நிலத்தை கடந்த 2022-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக, ஸ்ரீரங்கம் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராம்குமார், சார்பதிவாளர் வனிதா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ராம்குமாா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த அக்.1-ம் தேதி ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ராம்குமார் தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்ப்டட மனு மீதான விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, ‘ராம்குமார் வாங்கியுள்ள சொத்து, சொத்துக்கு உரியவர்களிடம் இருந்துதான் முறைப்படி வாங்கப்பட்டுள்ளது.
இனாம் செட்டில்மென்ட் குறித்து வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இதை கோயில் சொத்தாக கருதக் கூடாது.
முறையான ஆவணங்களை தாக்கல் செய்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராம்குமார் மீது பொய்யாக வழக்குப் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராம்குமாருக்கு உடல்நிலை பிரச்சினைகள் இருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.
அதையடுத்து, மாநகர குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன், ‘ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் சர்வே எண் 298. இதற்குட்பட்ட 5.87 ஏக்கர் நிலம் பின்னாளில் உட்பிரிவுகள் (சப் டிவிஷன்) செய்யப்பட்டு 762/1, 762/2 என பிரிக்கப்பட்டது. இதில் 762/2ல் உள்ள 5.31 ஏக்கர் நிலம் ரங்கநாதர் பெயரில் உள்ளது. மீதமுள்ள 56 சென்ட் நிலத்தைதான் பத்திரப் பதிவு செய்துள்ளனர்.
இனாம் செட்டில்மென்ட் வழக்கில் இடம் கோயில் நிலம் என்பது உறுதியானதை தொடர்ந்து யாரும் மேல்முறையீடு செய்யவில்லை. இடத்தை விற்றவர்களும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக உள்ளனர். ராம்குமாரை தவிர மற்றவர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டியுள்ளது.
மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சொத்து ராம்குமார் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேகாலக்கட்டத்தில் ராம்குமார் வங்கிக்கணக்கில் இருந்து சுமார் ரூ.4.02 கோடியை 69 நபர்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் பலரை அடையாளம் காண முடியவில்லை.
அவர்கள் அனைவரையும் கண்டறிய வேண்டியுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்திலும், ராம்குமாரிடம் இருந்து பல ஆவணங்களை கைப்பற்ற வேண்டியுள்ளது. இதற்காக ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு சிவில் வழக்கு மட்டுமல்ல, கூட்டுசதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோத பணபரிமாற்றம் போன்ற குற்றங்களும் நடைபெற்றுள்ளன.
இவை அனைத்தும் குறித்து முழுமையாக நீண்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிறிஸ்டோபர், ராம்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
