ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபிஓ இந்தியாவின் மிக மதிப்புமிக்க வணிகக் குழுக்களின் தரவரிசையை மாற்றிமைத்துள்ளது. புதன்கிழமை அன்று ஒரு பங்கின் விலை ரூ. 1,358 என்ற கணக்கில் ஜியோ சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் டாடா குழுமத்தை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜியோவின் ஐபிஓவுக்குப் பிறகு ரிலையன்ஸ் குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ. 28.9 லட்சம் கோடியை எட்டியது. டாடா குழுமம் ரூ. 25.6 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்திலும், ரூ. 16.6 லட்சம் கோடியுடன் அதானி குழுமம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஜியோவின் பங்கு வர்த்தகம் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த மதிப்பிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. ஐபிஓ வெளியீட்டு விலையான ஒரு பங்கின் விலை ரூ. 1,119-ஐ விட 21.4 சதவீதம் கூடுதல் பிரீமியத்துடன், பங்கு ரூ. 1,358-க்கு பட்டியலிடப்பட்டது. இந்தப் விலையின்படி, ஜியோவின் சந்தை மதிப்பு ரூ. 12.5 லட்சம் கோடியாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இரண்டும் சேர்ந்து ரூ. 28.7 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன. மேலும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 79.8 லட்சம் பங்குதாரர்களைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய பங்குதாரர் தளத்தைக் கொண்ட நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஜியோவின் பட்டியலிடலைக் குறிக்கும் பாரம்பரிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி , இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர்.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் அம்பானி பேசுகையில், “இன்றைய பட்டியலிடல் என்பது ஒரு இறுதிப் புள்ளி அல்ல. மாறாக, ஒரு தொடக்கப் புள்ளியாகும். நாங்கள் வெளிப்படையாகத் தொடர்புகொள்வோம். எங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். மேலும் செயல்கள் மூலம் உங்கள் நம்பிக்கையைப் பெறுவோம்” என்றார். ஜியோவின் பட்டியலிடலில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஆகியவை முறையே இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது மிக மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாறியுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு மட்டுமே, டாடா குழுமத்தின் அனைத்துப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பை விட ரூ. 3.1 லட்சம் கோடி அதிகமாகும்.
இவ்வாறு ஜியோவின் வரவு இந்தியாவின் மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தரவரிசையை மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரிய வணிகக் குழுக்களின் தரவரிசையையும் மாற்றி எழுதியுள்ளது.
