எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், அதில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, எஸ்.ஐ.ஆரில் நடைமுறையில் அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அவசரகதியாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், எஸ்.ஐ.ஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனி வரும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேற்சொன்ன இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் குடியரசுத் தலைவரிடம் திமுக எம்.பிக்கள் மனு அளிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக எம்.பிக்கள் மின்னஞ்சல் மூலமாக மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “திமுக எம்.பிக்கள் குழு குடியரசுத் தலைவரை சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்தோம். நேரம் கிடைக்காததால் மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே குடியரசுத் தலைவர் நேரம் வழங்காதது வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார்.
