கேள்விகளுக்குப் பதில் வேண்டும்; ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ஸ்டாலின் முன்வைத்த 9 கோரிக்கைகள்!

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பிய மனுவில், 9 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:

1. தேர்தல் கமிஷனின் பெரும்பான்மை ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட முடிவுகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெற வேண்டும்.

2. வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதுவரை 100% VVPAT எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

3. குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையையும் பாதுகாக்கத் தேவையான அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்களில் பயன்படுத்த கூடாது.

5. நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

6. ECINET, ERONET தேர்தல் கமிஷன் சாராத வல்லுநர்களைக் கொண்டு தடயவியல் ஆய்வு நடத்த வேண்டும்.

7. தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. தேர்தல் கமிஷனில் தனிநபர் ஆதிக்கத்தைத் தடுத்து, கூட்டு முடிவெடுக்கும் முறையை உறுதி செய்ய வேண்டும்.

9. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாதது மற்றும் தேர்தல் முடிவுகளில் அதன் தாக்கம் குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெற வேண்டும்.

கேள்விகளுக்கு பதில் வேண்டும்!

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா? தேர்தல் கமிஷனின் நம்பகத் தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள். ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை; எஸ்ஐஆர் ரத்து; மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனு அனுப்பி உள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை.

ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும். ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link