“எடுப்பார் கைப்பிள்ளையாக முதல்வர் விஜய் செயல்படுகிறார்” – மு.அப்பாவு விமர்சனம்

திருநெல்வேலி: “தமிழக வெற்றிக் கழகத்தினரின் தொடர்பில்தான் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார்” என்று முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி, ராதாபுரம், நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் ராதாபுரம் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல கடந்த திமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தடையின்றி பொது மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. திமுகவின் எதிர்ப்புக்கு பணிந்து தமிழக வெற்றிக் கழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மின்சார கொள்முதலில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், மின்சாரத் துறை மற்றும் சிறைத் துறைக்கு ஒரே அமைச்சர் இருப்பதால் திட்டமிட்டு கைதிகள் தப்பவிடப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அதானிக்கு மின்சார துறையை ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்கையான மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதும் அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் நடைபெறுகிறது.

மின்சாரத் தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்படுகிறது. மின்சாரத் துறையை அதானியிடம் ஒப்படைக்கும் வரை மின்சாரத் துறை அமைச்சர் பதவியில் இருப்பார். அதுவரை சிறை கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் தொடரும்.

தமிழக முதல்வருக்கு நெருக்கமானவர்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். ஆந்திர மாநில பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பான அறிக்கைகள் முதல்வருக்கு செல்வதில்லை.

அவருக்குச் செல்லும் தகவல்கள் அனைத்தும் ரெட்டி குழுவினருக்கும் அமைச்சர்களுக்கும் மட்டுமே செல்கின்றன. தமிழகத்தில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. முதல்வர் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தினரின் தொடர்பில்தான் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. கேரள உள்துறை அமைச்சர் நேரடியாக தமிழக முதல்வரை சந்தித்து, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போதை பொருட்கள் வருவதை தடுக்க வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.

முதல்வர் ஒருநாள் பணியாற்றினால் 2 நாட்கள் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளார். சிறந்த காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் அவர்களை அரசு முறையாக பயன்படுத்தவில்லை.

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்கும் வகையில், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள தடையை இடைக்கால நடவடிக்கையாக வரவேற்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

Source link