மகனைக் கடத்திவிட்டதாக வந்த தொலைப்பேசி அழைப்பைத் தொடர்ந்து, பதற்றமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்த 17 வயது மாணவர் ஒருவர், திடீரென காணாமல் போனார். பின்னர், அவரது பெற்றோர்களுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில், ”உங்கள் மகனைக் கடத்திவிட்டோம். எங்களுக்கு ரூ.5 லட்சம் (அல்லது ரூ.10 லட்சம்) பணம் கொடுத்தால் உங்கள் மகனை விட்டுவிடுகிறோம்” எனக் கூறியுள்ளனர். இதனால், அக்குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதனைத்தொடர்ந்து, மாணவனின் தந்தை பணத்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சியில் இறங்கினார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையைத் தொடங்கினார். காவல்துறையினர் பெற்றோருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பைப் பின்தொடர்ந்து விசாரணையைத் தொடங்கினர். அந்த தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவன் வாரணாசி ரயில் நிலையத்தில் தன் தோழியுடன் அவர் பாதுகாப்பாக இருப்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரே தனது தந்தையிடம் இருந்து பணம் பெறுவதற்காக இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த மாணவனுக்கு எதற்காக இந்த தொகை தேவைப்பட்டது? இதற்குப் பின்னால் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த அந்த மாணவர், ஆன்லைன் கேமிங்கில் ரூ.50,000 இழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, முன்பு ரூ.70,000 வரை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த சூழலில், தன் குடும்பத்தினரிடம் குரலை மாற்றிப் பேசி, ரூ.5 லட்சம் கேட்டு போலி மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் உட்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
