தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில், தற்போது பதிவாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளில் நடைபெற்ற இணைவு ஆய்வுகளில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள பல கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்ததாகப் பதிவுகள் இருப்பது, சில பேராசிரியர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் ஒரே நேரத்தில் முதல்வர்களாகப் பதிவாகியிருப்பது உள்ளிட்ட விவரங்களைச் சுட்டிக்காட்டி, விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது. அரசு தரப்பில் அறப்போர் கொடுத்த புகார் விசாரணை மேற்கொள்வதாக செய்திகளில் கூறியிருந்தது.
இந்நிலையில், 26.10.2026 தேதியிட்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, டாக்டர் K. இராஜசேகரன் அவர்கள் பதிவாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பேராசிரியர் M. கண்மணி அவர்கள் பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. அத்துடன் கொடுக்கப்பட்ட புகார் முழுவதுமாக, வெளிப்படையாக விசாரிக்கப்படவேண்டும் எனவும் கோருகிறது. இணைவு ஆய்வு மோசடி, போலியான பேராசிரியர்கள் தரவை வழங்கிய கல்லூரி நிர்வாகம், போலியான பேராசிரியர்கள் தரவை அங்கீகரீத்த குழு ஆகியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அத்துடன்,
1. இணைவு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பணி புரியும் பேராசிரியர்களின், புகைப்படம் அடங்கிய முழு விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
2. ஒழுங்கற்ற வகுப்புகள் (Irregular Classes) முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும்.
3. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது போல, இணைவு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு, மாதாந்திர இணையவழி ஆதார் – பயோமெட்ரிக் வருகை நடத்தப்பட வேண்டும்.
4. சிண்டிகேட் சந்திப்பின் தீர்மானங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது பல்கலைக்கழகம் மற்றும் அரசின் கடமை. எனவே, இந்த விவகாரத்தில் விசாரணையின் நிலை மற்றும் அதன் முடிவுகளை அரசும் பல்கலைக்கழகமும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
