ரூ.23,165 கோடியில் 120 கி.மீ மேம்பாலம்: பெங்களூரு டிராஃபிக் பிரச்சனையை முடிக்க கர்நாடகா அரசு பிரம்மாண்ட பிளான்

பெங்களூரு நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ரூ.23,165 கோடி மதிப்பீட்டில் 120 கி.மீட்டர் நீளமுள்ள மேம்பாலங்கள் (Elevated Corridors) அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசு பெங்களூரின் உள்கட்டமைப்பை விரைவுபடுத்தி வருகிறது. தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிருஷ்ணா’வில் பெங்களூருவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை அறிவித்தார்.

வரும் 2037-ஆம் ஆண்டில் பெங்களூரு நகரம் தனது 500-வது ஆண்டை எட்டவுள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. இதன் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் தரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த 120 கி.மீ மேம்பால சாலைகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 10 கி.மீட்டருக்குக் குறைவான நீளம் கொண்ட சாலைகளில் பயணம் செய்ய சுங்கக் கட்டணம்  வசூலிக்கப்படாது. ஆனால், 120 கி.மீ நெட்வொர்க்கில் 10 கி.மீ-க்கும் அதிகமான நீளம் கொண்ட சாலைகளில் செல்வோர் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 40 கி.மீ நீளத்திற்குச் சுரங்கப் பாதைகளும் (Tunnel Corridors) திட்டமிடப்பட்டுள்ளன.

வடக்கு-தெற்கு இணைப்பாக 16.5 கி.மீ சுரங்கப் பாதை ரூ.17,780 கோடியிலும், கிழக்கு-மேற்கு இணைப்பாக 21 கி.மீ சுரங்கப் பாதையும் அமைக்கப்படும்.

ஹெப்பால் பகுதியில் 2 கி.மீ சுரங்கப் பாதைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

இவை தவிர, மழைநீர் வடிகால்களை ஒட்டி 300 கி.மீ சாலைகள், 68 கி.மீ பிசினஸ் காரிடார் உட்பட மொத்தம் 500 கி.மீ அளவுக்குப் புதிய இணைப்புச் சாலைகளும், 1,500 கி.மீ முக்கியச் சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

நம்ம மெட்ரோ 3-ஆம் கட்டப் பாதையில் 37 கி.மீ தூரத்திற்கு டபுள் டக்கர்  முன்மொழியப்பட்டது. இதில் முதற்கட்டமாக 11 கி.மீ தூரத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மெட்ரோ மற்றும் பேருந்து வசதிகள் விரிவாக்கம்:

தற்போது 96 கி.மீ நீளமாக உள்ள மெட்ரோ ரயில் சேவையை 2027-ஆம் ஆண்டிற்குள் 170 கி.மீ ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரில் இயக்கப்படும் 7,000 பேருந்துகளுடன் கூடுதலாக 4,500 புதிய பேருந்துகள் சேர்க்கப்படும். 2030-க்குள் 150 கி.மீ தூரத்திற்கு புறநகர் ரயில்  இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பின் (GBA) எல்லைக்கு வெளியே உள்ள, நகரமயமாக்கப்பட்ட 65 கிராம பஞ்சாயத்துகள் புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாக உயர்த்தப்படும். இதன் மூலம் பிரதான நகரத்தின் மீதான சுமை குறையும்.

அத்துடன், தினமும் உருவாகும் 9,000 டன் குப்பைகளைச் சேகரிக்கப் புதிய ஒப்பந்தங்கள் மறுசீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. கழிவு சேகரிப்பு வாகனங்களில் ஜி.பி.எஸ் கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முறைகேடு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.கே.சிவகுமார் எச்சரித்துள்ளார்.

Source link