புதுடெல்லி.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில், 14 கப்பல் ஊழியர்கள் உள்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 14 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.சவுதி அரேபியாவில் மட்டும் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்”என்றார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, அந்த நாடு மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படையினர் சவுதி அரேபியா மீது நடத்திய தாக்குதல்களால் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகள் தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப்பாக, சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாயை ஹவுதி படையினர் தாக்கியுள்ளனர். இந்தக் குழாய், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
