ரஞ்சி கோப்பை: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு…ரெயில்வே அணியை வீழ்த்திய தமிழ்நாடு

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

184 ரன்களுக்கு சுருண்ட ரெயில்வே

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 53.3 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் சுபைர் அலி கான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார்.

தமிழ்நாடு அணியின் சார்பில் சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

165 ரன்களுக்கு ஆட்டமிழந்த தமிழ்நாடு

தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய தமிழ்நாடு அணி 63.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார்.

ரெயில்வே அணியின் பந்துவீச்சில் ராஜ் சவுத்ரி 5 விக்கெட்டுகளையும், தவுபிக் உத்தீன் மொண்டல் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 19 ரன்கள் முன்னிலை பெற்றது.

108 ரன்களுக்கு சுருண்ட ரெயில்வே

இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்து விளையாடிய ரெயில்வே அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டையும் இழந்தது. இதனால் அந்த அணி 52.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரெயில்வே அணியின் கேப்டன் சாஹப் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணியின் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், ஹேம்சுதேசன் 3 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 2 விக்கெட்டுகளையும், குர்பஜ்னீத் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து, தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாடு வெற்றி

எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் நாராயண் ஜெகதீசன் 12 ரன்களிலும், ஆதிஷ் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சோனு யாதவ் 2 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் பாபா இந்திரஜித் மற்றும் சித்தார்த் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர். இந்திரஜித் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய சித்தார்த் அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் தமிழ்நாடு அணி 59.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சித்தார்த் 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரெயில்வே அணியின் சார்பில் தவுபிக் உத்தீன் மொண்டல் 4 விக்கெட்டுகளையும், ராஜ் சவுத்ரி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். சிறப்பாகப் பந்துவீசிய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அணியின் அடுத்த போட்டி

இந்த ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி ஏற்கெனவே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியைச் சமன் செய்திருந்தது. உத்தரகாண்ட் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அடுத்ததாக, தமிழ்நாடு அணி தனது நான்காவது போட்டியில் சண்டிகர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நவம்பர் 2-ஆம் தேதி சண்டிகரில் தொடங்குகிறது.

Source link