பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் முதல் பாகத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு கடந்த சில வாரங்களாக கலந்து கொண்டது. இதில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்கள் அடங்கும். இதனைத் தொடர்ந்து படத்தின் உலகளாவிய ப்ரீமியர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மியூசியத்தின் டேவிட் கெஃபென் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் நமித் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்தை பார்த்த பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. அதில் அவர் கூறியதாவது, “சினிமாவில் ராமாயணம் போல் வேறொரு படைப்பு எதுவும் இல்லை. ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ (Lord of the Rings) படத்தின் முதல் பாகம் வெளியானபோது எப்படி உணர்ந்தேனோ, அதே போன்றதொரு உணர்வு இப்போது இருக்கிறது. இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமானது, ஒரு காவியம் போன்றது.
இதில் ராமரின் கதாபாத்திரம்… உண்மையிலேயே அபாரமாக இருந்தது. படத்தின் இறுதியில் வரும் அந்த எதிர்பாராத திருப்பம், படம் முடிந்தபோது, ​அது ​வேண்டாம் என்று கத்திவிட்டேன். ஏனென்றால், இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறது. இதற்கு மிக நெருக்கமான படைப்பு என்று பார்த்தால் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’தான், ஆனால் அதனுடன் கூட இதை ஒப்பிட முடியாது. மூன்று மணிநேரம் நீடிக்கும் பிரம்மாண்டமான படம் இது. நான் பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை” என்றுள்ளார். அதே போல் பலரும் யஷ்ஷின் நடிப்பையும் படத்தின் பிரம்மாண்டத்தையும் குறிப்பிட்டு பாராட்டுகின்றனர்.
அதே சமயம் இசையின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவு இல்லை என ஒரு சிலர் கூறுகின்றனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ஹான்ஸ் ஜிம்மரும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்படி சில விமர்சனங்கள் வந்திருப்பது அதிருப்தியையும் கொடுத்துள்ளது. இருப்பினும் படம் வெளியான பிறகு அனைத்து ரசிகர்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமென இந்திய ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
