வீட்டு வாடகையால் ஏற்பட்ட தகராறில், வாடகைக்குக் குடியிருந்தவர் அறையிலேயே கள்ள நோட்டுகள் அச்சிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரின் கர்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது வீட்டைப் புஷ்பக் கிருஷ்ணா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கடந்த ஒன்றை ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் அவர், கடந்த ஜனவரி மாதம் முதல், வாடகை தராமல் காலங்கழித்து வந்துள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாக வாடை தராமல் இருப்பதால், வாடகையை ரமேஷ் கண்டிப்புடன் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த புஷ்பக், ரமேஷை ஆயுதத்தைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ரமேஷ் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனால், பயந்துபோன புஷ்பக் வீட்டைவிட்டு வெளியேறித் தலைமறைவாக இருந்துவந்தார். நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்கு வராததால், அந்த அறையை ரமேஷ் திறந்து பார்த்துள்ளார். அப்போது, அந்த அறை முழுவதும் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்பு, இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அறைக்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு ரூ.38 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அத்துடன் அச்சடிக்கும் இயந்திரத்தையும் அவர் அங்கே வைத்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
