உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் உள்ள 28 சட்ட மேலவை (MLC) தொகுதிகளுக்கு வாக்குச் சீட்டு (Ballot Paper) முறையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் இடங்களைப் பெற்றதைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு செய்யப்படுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிரிப்பு எமோஜியுடன் பிரதமர் மோடி எக்ஸ்தளப்பதிவு
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில், “4 பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகாவில் 28 இடங்களுக்கு MLC தேர்தல்கள் நடந்தன. இந்தத் தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இதில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?” என்று ஒரு சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜிய வெற்றி
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 28 இடங்களில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திலேயே போட்டியிட்ட 4 இடங்களிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள் (EVM) மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் பழியைப் போடும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு இந்த வாக்குச் சீட்டு தேர்தல் முடிவு ஒரு தகுந்த பதிலடி என்றும், பிரச்சினை இயந்திரங்களில் இல்லை, மக்களின் ஆதரவை இழந்த காங்கிரசின் செயல்பாட்டில்தான் உள்ளது என்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும், இது ஒரு மேலவைத் தேர்தல் என்பதால் இது ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்தகட்டமாகச் செயல்படுவோம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
எம்எல்சிகளை தேர்வு செய்வது எப்படி ?
இந்திய அரசியல் சாசனத்தின்படி, ஒரு மாநிலச் சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, அம்மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு (1/3) மிகாமலும், குறைந்தபட்சம் 40 உறுப்பினர்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். இந்த உறுப்பினர்கள் பின்வரும் ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்: மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மூன்றில் ஒரு பகுதியினர் அம்மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் (MLAs) வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பன்னிரண்டில் ஒரு பகுதியினர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு (Degree) முடித்து, அந்த மாநிலத்திற்குள் வசிக்கும் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பன்னிரண்டில் ஒரு பகுதியினர் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி வரும் நபர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதமுள்ள ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை மாநில ஆளுநர் நேரடியாக நியமிக்கிறார். கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இந்த முறையில் நியமிக்கப்படுகிறார்கள்.
Source link
