புதுடில்லி: டில்லியில் நடந்த எஸ்ஐஆர் நடவடிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இடம்மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப்பதிவு என வகைபடுத்தப்பட்டு 47.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கலானது. இதனை தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா விசாரித்தனர்.
” வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கும்போது தேர்தல் கமிஷன் சிந்தித்து செயல்பட்டதா? முகவரி மாறிய பிறகு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவர்கள், புதிய வாக்காளர்களாக படிவம் 6 ஐ நிரப்பும்படி ஏன் கேட்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும். படிவங்களை சமர்ப்பிக்காத அல்லது வீட்டை மாற்றிய வாக்காளர்கள், முகவரி மாற்றத்திற்கான படிவம் 8 ஐ தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
” கால அவகாசம் நீட்டிக்கப்படும்,” என தேர்தல் கமிஷன் உறுதியளித்தது.
நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ,” ஓட்டளிக்கும் உரிமை என்பது முக்கியமான கடமை. உரிய நேரத்தில் விண்ணப்பத்தை அளிக்கத் தவறியவர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் உரிமையை இழக்க வேண்டுமா? வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் ஏன் சமர்ப்பிக்கவில்லை என்பதற்கு வாக்காளர்களிடம் விளக்கமளிக்க கோரலாம். படிவங்கள் 6, 7, 8 ஆகியன சட்டப்படி பரிந்துரை செய்யப்பட்டவை. அவற்றை மாற்ற முடியாது,” என்றார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த்,” வசிப்பிடத்தை மாற்றுவதற்காக உள்ள படிவம் 8 ஐ வாக்காளர்கள் ஏன் பயன்படுத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன் விளக்கமளிக்க வேண்டும். மற்ற பெருநகரங்களை போலவே டில்லியிலும், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என அடிக்கடி இடம்பெயரக்கூடியவர்கள் உள்ளனர். வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த ஒருவர், தனது முந்தைய ஓட்டுச்சாவடி எண் மற்றும் வாக்காளர் எண்ணைத் தெரிவித்தால் போதுமானது. அவர்கள் ஏன் படிவம் 6-ஐ நிரப்ப வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
