தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
அரசியல் கட்சியினர் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாக்கிங் சென்றபடியே திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘ஜனநாயகன்’ படம் லீக் ஆகி இருக்கும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ”அதைப் பற்றி எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் ஆதவ் அர்ஜுனா பற்றிய செய்திகளை எல்லாம் படிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டார். நான் நடப்பது இதற்காக நடப்பதில்லை எப்பொழுதும் நடப்பேன்.
எந்த ஊருக்கு போனாலும் சென்னையில் இருந்தாலும் சரி வெளியூருக்கு போனாலும் சரி காலையில் நடப்பது என்னுடைய பழக்கம். அது ஒவ்வொரு ஏரியாவிலும் நடக்கும் பொழுது மக்களைச் சந்திக்கிறேன். தேர்தல் நேரம் என்பதால் மக்கள் என்னைச் சந்திக்கிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். அது உற்சாகமாக இருக்கிறது” என்றார்.
பரமக்குடி நேதாஜிசாலை மற்றும் பெரியக்கடைவீதி, எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த முதல்வர் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு நெசவாளர் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் அரசின் திட்டங்கள் வந்து சேர்ந்துள்ளதா என்பது குறித்துக் கேட்டறிந்தார். அதன் பிறகு நெசவு இயந்திரத்தில் அமர்ந்து அதன் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து நெசவு செய்தலில் ஈடுபட்டார். மேலும் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
