சென்னை மாவட்ட வளர்ச்சி கூட்டம்; கைக்குழந்தையுடன் மேயர் பிரியா அருகில் அமர்ந்த எம்.எல்.ஏ பல்லவி; நெட்டிசன்கள் கருத்து

சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் வந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. இதில் சென்னையில் துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளையும் த.வெ.க கைப்பற்றியது. அதே சமயம், த.வெ.க எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் இடையேயான மோதல் போக்கு அவ்வப்போது அரங்கேறி வருகிறது. 

குறிப்பாக சென்னை மேயர் பிரியா வெளிப்படையாக பல மேடைகளில் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், புதிய கட்டிட திறப்பு விழா ஒன்றில், எம்.எல்.ஏ பல்லவி, மேயர் பிரியா இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், எம்.எல்.ஏ பல்லவி எல்லா இடங்களுக்கும் தனது குழந்தையுடன் செல்கிறார் என்று மேயர் பிரியா விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்கு எம்.எல்.ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் வந்து மேயர் பிரியா அருகிலேயே அமர்ந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (அக்டோபர் 28) நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டம் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் எம்.பி தயாநிதி மாறன், எம்.எல்.ஏ சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் அமர்ந்திருக்க, மேயர் பிரியாவின் அருகில், எம்.எல்.எ பல்லவி தனது கைக்குழந்தையுடன் வந்து அமர்கிறார். அவரை பார்த்த மேயர் பிரியா முகத்தை திருப்பிக்கொண்ட வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான பல்லவி தனது குழந்தையுடன் நிகழ்சசியில் கலந்துகொள்வது இது முதல்முறை அல்ல. அதே சமயம் இந்த கூட்டம் சலசலப்பும் நிறைந்த சூழலில் இது குழந்தைக்குப் பாதுகாப்பற்றது என்றும், கவனத்தை ஈர்ப்பதற்காகவே குழந்தையுடன் வந்துள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், ஒரு தாயாகத் தனது கடமையையும், தாய்மையையும் சமநிலைப்படுத்த இந்த முடிவு அவசியமானது என்று பல்லவி தனது நியாயத்தை கூறியுள்ளார். அதேவேளையில், குழந்தைகள் பராமரிப்பு (Childcare) போன்ற சிறந்த ஆதரவு அமைப்புகள் வழங்கப்பட வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வு, மேயர் பிரியாவுடனான மனக்கசப்புகளையும், பொதுப் பதவிகளில் இருக்கும் பணிபுரியும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த பரவலான விவாதங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. 

இதனிடையே, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் போன்ற தலைவர்கள் இதனை ‘அரசியல் விளம்பர உத்தி’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Source link