நாகை மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து செய்தியாளர்களை மிரட்டி வருவதைக் கண்டித்து நாகை பிரஸ் கிளப் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பங்கேற்றனர். இதுகுறித்த விபரம் வருமாறு:
நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த த.வெ.க நிர்வாகி பூபாலன், அவரது கூட்டாளிகள் சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகியோர் பல கோடி ரூபாய் மதிப்பிலான 137 கிலோ உயரக மெத்தபெட்டமின் கடத்தியதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டது குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில் செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை த.வெ.க நாகை நகர நிர்வாகி பால்ராஜ் வாட்ஸ் அப் கால் செய்து மிரட்டல் விடுத்தார். மாவட்ட செயலாளர் சுகுமார் கூட இருக்கும் படத்தை போடலாமா என ஆபாசமாகி பேசி அனைத்து செய்தியாளர்களும் ஒழுங்காக இருந்துக் கொள்ளுமாறும், இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை உங்களை காலி செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் பிரஸ் கிளப் சார்பாக அனைத்து பத்திரிகையாளர்களும் நாகை எஸ்பி கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திராவை நேரில் சந்தித்து த.வெ.க நிர்வாகி பால்ராஜ் மீது புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி பால்ராஜ் மீது நாகை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பின்னர் ஜாமின் பெற்றார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/28/nagai-press-club-protest-against-tvk-1-2026-10-28-21-16-33.jpeg)
இந்நிலையில் வேளாங்கண்ணி பேரூராட்சி த.வெ.க தலைவர் தமிழரசன் த.வெ.க அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர்கள் தொடர்ந்து போலியான செய்திகளை வெளியீட்டு வருவதாக பொய் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் செய்தியாளர்களை மிரட்டி வருவதும், காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து வருவதை கண்டித்து நாகை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/28/nagai-press-club-protest-against-tvk-2-2026-10-28-21-16-33.jpeg)
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று மாவட்ட த.வெ.க நிர்வாகிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் சகாயராஜ், மூத்த செய்தியாளரும் அரசியல் விமர்சகருமான ஜீவ சகாப்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
