நொய்யல் ஆற்றில் சாயப் பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நுரை பொங்கி வருகிறது. இதனால் மக்கள் நீரை பயன்படுத்த முடியாத நிலையில், அதிகப்படியான நுரை வெளிப்படுவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஆற்றில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புகள் காரணம் என குறிப்பிட்டு, சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் பேட்டியளித்தார்.
அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மற்றுமின்றி சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் மத்தியிலும் பேசுப் பொருளாகியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமான் அறிக்கை
ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள். சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை என வருத்தம் கலந்த நகைச்சுவை பாணியில் சீமான் குறியிட்டுள்ளார்.
ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா? எனவும் கேள்வி எழுப்பிய சீமான்,
குழாய்களை ஆறுகளில் இணைத்துவிட்டார்களா
தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா? எனவும் அந்த அறிக்கையில் தொடர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
குழந்தைக்குக்கூட சந்தேகம் எழுகிறது
ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு? என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல. “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில் எனவும், தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அரசு மீது விமர்சனம்
ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள். சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள். விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள், மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது எனவும் இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Source link
