முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு : தமிழக அரசு உத்தரவு!

கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை மற்றும் பெரியாறு ஆறுகள் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானம் 1887ஆம் ஆண்டு தொடங்கி 1895ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதற்கான கட்டுமானத்தின் போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பிரிட்டிஷ் அரசு நிதியை நிறுத்தியபோது, பென்னி குவிக் இங்கிலாந்திலிருந்த தனது சொத்துக்களை விற்று இந்த அணையைக் கட்டி முடித்தார். 

மேற்கு நோக்கி அரபிக்கடலில் வீணாகக் கலந்த பெரியாறு நதியின் நீரை, சுரங்கப்பாதை வழியாகக் கிழக்கு நோக்கித் திருப்பி வைகை ஆற்றுடன் இணைத்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் இந்த அணை இன்றியமையாத ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணை கேரளப் பகுதியில் அமைந்திருந்தாலும், 1886ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இதன் உரிமை மற்றும் பராமரிப்பு முழுமையாகத் தமிழ்நாடு அரசின் வசம் உள்ளது

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் குறிப்பிட்ட பகுதியில் நில அதிர்வு தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக, சிஎஸ்ஐஆர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளை ஈடுபடுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மதிப்பிடப்பட்டுள்ள 43 லட்ச ரூபாய் செலவில் இந்த இரண்டு முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து முல்லைப் பெரியாறு அணையின் குறிப்பிட்ட பகுதிகளில் விரிவான நில அதிர்வு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன. இதற்கான உத்தரவைத் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ம.அ. சித்திக் பிறப்பித்துள்ளார்.