இந்திய சினிமாவின் முன்னணி பாடகிகளில் முக்கியமானவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் சினிமாவில் இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசை மற்றும் எஸ்.பி.பி போன்ற முக்கிய பாடகர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், தனது மகளின் இறப்பால் இசையை விட்டு விலக நினைத்தபோது அவரை வற்புறுத்தி பாட அழைத்து வந்துள்ளார் இளையராஜா.
தனது காந்தக் குரலாலும் காலத்தால் அழியாத பாடல்களாலும் நம் வாழ்க்கையை ஒளிமயமாக்கி, நம் வாழ்வின் இருண்ட நாட்களில் கூட நமக்கு ஆறுதல் அளித்த ஒரு புகழ்பெற்ற பாடகி தான் கே.எஸ். சித்ரா. ஆனால், தனது செல்ல மகளின் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சித்ரா மற்றும் அவரது கணவர் விஜய் சங்கருக்கு திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து, 2002-ல் ஒரு மகள் நந்தனா பிறந்தார். ஆனால், எட்டு ஆண்டுகள் மட்டுமே இருந்த அவர் 2011-ம் ஆண்டு உயிரிழந்தார்.
மகளின் பிரிவால் உடைந்துபோன சித்ரா, நீண்ட காலம் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விலகி இருந்தார். இருப்பினும், ‘மலையாளத்தின் வானம்பாடி’ என்று அன்போடு அழைக்கப்படும் சித்ராவை மீண்டும் பொதுமேடைகளுக்குக் கொண்டுவருவதில் ‘இந்தியாவின் வானம்பாடி’ லதா மங்கேஷ்கர் முக்கியப் பங்கு வகித்தார். ஆனாலும், அவரால் உடனே மீண்டும் பாடத் தொடங்க முடியவில்லை. இறுதியில் இளையராஜாதான் சித்ராவை மீண்டும் இசை உலகிற்கு அழைத்துச் சென்றார்.
இது குறித்து தன்யா வர்மாவுடனான நேர்காணலில் பேசிய சித்ரா “என்னை மீண்டும் அழைத்து வர தீவிர முயற்சி செய்தவர்களில் ரஞ்சினி ஹரிதாஸும் விஜய் டிவியின் ரவூஃபாவும் முக்கியமானவர்கள். நான் திரும்பி வந்தால்தான் ஷூட்டிங் (சித்ரா பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள்) தொடங்கும் என்று அவர்கள் கூறினர். நிலைமையை எனக்குப் புரியவைக்க ஆசியானெட் சேனல் ஒவ்வொரு மாதமும் ரஞ்சினியை என்னிடம் அனுப்பும். அந்த நேரத்தில் எனக்குத் திரும்பி வர விருப்பமும் இருக்கவில்லை. அந்த கட்டத்தில்தான் லதாஜியின் பெயரிலான விருதுக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஹைதராபாத்தில் அது நடந்தது.
அங்கு செல்லும் மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது லதாஜி போன் செய்து, ‘நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்; நானும் அங்கு வருவேன்’ என்றார். ஆனால் அப்போதும் நான் பாடவில்லை. உண்மையில் நான் நீண்ட காலத்திற்குப் பாடவில்லை. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் பாடினேன். சென்னையில் நடந்த இளையராஜா சாரின் இசைக்கச்சேரி மூலமாகத்தான் எனது ரீ-என்ட்ரி அமைந்தது. (நந்தனாவின் மறைவுக்குப் பிறகு) நான் மீண்டும் ரெக்கார்டிங் செல்லத் தொடங்கும் வரை எனது சகோதரியும் (பீனா) நாத்தனாரும் (ராஜி) மூன்று நான்கு மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.
இளையராஜா சார் என்னை ரிகர்சலுக்கு வருமாறு கூப்பிட்டார். என்னால் வர முடியாது என்றும், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நான் கூறினேன். ஆனால் நான் வரவில்லை என்றால் அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிடுவேன் என்று அவர் கூறினார். ஒருவேளை என்னை அங்கு வரவைப்பதற்காக மட்டுமே அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம், ஆனாலும் அவர் அந்த வார்த்தையைக் கூறினார்.
அவருடைய மனைவி (ஜீவா) இறந்து அப்போது மூன்று மாதங்களே ஆகியிருந்தன. என் மகள் நந்தனா பிரிந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தன. ‘என்னோடு 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் பிரிந்துவிட்டார். இருப்பினும் நான் நிகழ்ச்சிக்கு வரவில்லையா? நீ அப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது, கண்டிப்பாக வர வேண்டும்’ என்று அவர் கூறினார்,” என சித்ரா நினைவுகூர்ந்தார்.
அந்தத் துயரத்தைப் பற்றியும், நந்தனாவின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கையை முன்னோக்கிப் கொண்டு செல்ல இசை தனக்கு எவ்வாறு உதவியது என்பதைப் பற்றியும் 2021-ல் ஆன்மனோரமாவுக்கு அளித்த நேர்காணலில் சித்ரா திறந்தமனதுடன் பேசினார்: “நான் அந்த வேதனையிலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. உண்மையில், அந்த நினைவுகளிலிருந்து நான் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறேன். அவை என்னை இன்னும் துரத்துகின்றன. ஆனால் எனது வேலையில் கவனம் செலுத்தி அந்த நினைவுகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன். அந்த வேதனையிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது என்பதால் அவற்றை ஒதுக்கி வைக்க மட்டுமே என்னால் முடியும். கடைசி மூச்சு வரை அவை என்னை விட்டுப் போகாது.
பலருடைய பிரார்த்தனைகள் என்னோடு இருப்பதாக நான் நம்புகிறேன். அந்தப் பிரார்த்தனைகளின் பலனால்தான் இந்தத் துயரத்திற்குப் பிறகும் எனக்குப் புதிய வாய்ப்புகள் வந்ததும் மீண்டும் பாட முடிந்ததும் ஆகும். எனக்கு நிகழ்ச்சிகளோ ரெக்கார்டிங்கோ எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த நாட்களை நான் எப்படி கடந்திருப்பேன் என்று நினைக்கும்போதே நடுங்குகிறது. அந்த நெருக்கடியான கட்டங்களிலும் கடவுள் என்னை ஏராளமாக ஆசீர்வதித்தார். அதற்கு இறைவனுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
இதே போன்ற வேதனையை அனுபவிக்கும் பல தாயார்கள் தங்கள் துக்கங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வதுண்டு. இந்த வேதனையிலிருந்து நான் எப்படி மீண்டு வந்தேன் என்று அவர்கள் பலமுறை என்னிடம் கேட்பார்கள். நான் இதிலிருந்து வெளியே வரவில்லை; மாறாக வேறு ஏதேனும் விஷயங்களில் மூழ்கி எல்லாவற்றையும் மறக்க முயற்சிக்கிறேன், அவ்வளவுதான். அதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு நிமிடம் சும்மா இருந்தாலும் என் மனம் வேதனையால் நிறையும், கண்கள் கலங்கும். அந்தத் துக்கம் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்று,” என்று அவர் கூறினார்.
2011 ஏப்ரல் 14 அன்று, சித்ராவின் எட்டு வயது மகள் நந்தனா துபாயில் உள்ள ஒரு வில்லாவின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். ஷார்ஜாவில் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக சித்ரா துபாய் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
